செய்திகள்
ராமர் கோவில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு வளையத்துக்குள் அயோத்தி - ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின

Published On 2020-08-03 18:51 GMT   |   Update On 2020-08-03 18:51 GMT
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை சடங்குகள் நேற்று காலையில் தொடங்கின.
அயோத்தி:

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை சடங்குகள் நேற்று காலையில் தொடங்கின. அங்கு கோவிலுக்கான அடிக்கல்லை நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி நாட்டுகிறார்.

ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர்.

மிகவும் சிறப்பான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த விழா நேற்று காலையில் கவுரி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. வாரணாசி, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 சாமியார்கள், அடிக்கல் நாட்டப்பட உள்ள ராமஜென்மபூமி வளாகத்தில் இந்த சடங்குகளை தொடங்கினர்.

முன்னதாக இந்த நாட்களில் ராம் லல்லா (குழந்தை ராமர்) சிலைக்கு அணிவிக்கும் 4 ‘செட்’ ஆடைகளை பண்டிட் காலிக்ராம், கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாசிடம் ஒப்படைத்தார். மேலும் விழாவுக்கான கொடியையும் அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்தே பூமி பூஜைக்கான சடங்குகள் முறைப்படி தொடங்கின.

எனினும் கொரோனா அச்சம் காரணமாக, சாமியார்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் கள் சிலரை தவிர வேறு யாரும் இந்த சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

இதைப்போல கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழாவுக்கு அழைப்பாளர்களின் எண்ணிக்கை 170-ஆக குறைக்கப்பட்டு உள்ளது. எனவே மிக மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அளிக்கப்படுகிறது.

விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான உமாபாரதி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கவில்லை என அறிவித்து உள்ளார். எனினும் அவர் இன்றே அயோத்தி செல்ல இருப்பதாகவும், நாளை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு அங்கு சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச பா.ஜனதா தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் இருந்து, அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்காக, குறிப்பாக பிரதமர் மோடிக்காக கவலைப்படுகிறேன். நான் நாளை (இன்று) அயோத்தியை எட்டுவதற்கு முன் யாராவது கொரோனா தொற்று உள்ளவரை சந்திக்க நேரலாம். எனவே பிரதமர் மோடி மற்றும் விழாவில் பங்கேற்கும் நபர்களை விட்டு தள்ளியே நிற்பேன். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றபிறகு சாமி தரிசனம் செய்வேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே கொரோனா மற்றும் சமூக விரோத செயல்கள் போன்ற எந்த தடையும் குறுக்கிடாமல் விழாவை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க உத்தரபிரதேச அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுவர். இதைப்போல சுகாதார அதிகாரிகளும் தெர்மல் பரிசோதனை போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி முழுவதும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என போலீஸ் டி.ஐ.ஜி. தீபக் குமார் தெரிவித்தார். இதற்காக 5 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல சமூக விரோத செயல்களை தவிர்ப்பதற்காக அயோத்தி மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. குறிப்பாக அயோத்தி, பைசாபாத் நகர எல்லைகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளன.

இவ்வாறு கொரோனா மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காக அயோத்தி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு வரலாறு காணாத கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆனால் இத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள், அயோத்தி மக்களின் மகிழ்ச்சியை எந்தவிதத்திலும் குலைக்கவில்லை. அவர்கள் ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவை தீபாவளி போலவே கொண்டாடி மகிழ்கிறார்கள். வீடுகளில் விளக்கேற்றியும், மின்விளக்குகளால் அலங்கரித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க அங்குள்ள கோவில்களில் அனைத்தும் விஷேச வழிபாடுகளும், சடங்கு முறைகளும் நடந்து வருகின்றன. அங்கு இடைவிடாது ஒலித்து வரும் பஜனைகளால் அயோத்தி முழுவதும் ஆன்மிக மணம் கமழுகிறது.

இதை மேலும் சிறப்பிக்கும் வகையில் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினரோ, காணும் இடமெல்லாம் ராமாயண காட்சிகளாலும், ராம பிரானின் படங்களாலும், வண்ண கோலங்களாலும் விழாக்கோலம் பூணச்செய்துள்ளனர். அயோத்தி முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்த நிகழ்வுகளால் அயோத்தியில் நேற்று முதல் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன.
Tags:    

Similar News