செய்திகள்
ரவீஷ் குமார்

கைது செய்யப்பட்ட 2 இந்தியர்களை பத்திரமாக விடுவிக்க வேண்டும் - பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

Published On 2019-11-21 12:21 GMT   |   Update On 2019-11-21 12:21 GMT
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இரு இந்தியர்கள் குறித்து தகவல் தரவும், அவர்கள் பத்திரமாக நாடு திரும்பவும் அந்நாட்டு தூதரகத்தை அணுகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட பகவல்பூரில் இரு தினங்களுக்கு முன்பு (நவம்பர் 18) அந்த நாட்டு குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இந்தியர்கள் இருவர் தங்கியிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் என்றும், மற்றொருவர் தெலுங்கானாவை சேர்ந்த தரிலால் என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதற்காக பாகிஸ்தானுக்கு வந்தனர் என விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் என்ஜினீயர். அவர் பயங்கரவாத தாக்குதலுக்காக வந்திருக்கலாம் என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இரு இந்தியர்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து பாகிஸ்தான் தூதரகத்தை அணுகியுள்ளோம் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

‘கைது செய்யப்பட்ட பிரசாந்த் மற்றும் தரிலால் இருவரும் கவனக்குறைவாக பாகிஸ்தான் எல்லையில் நுழைந்திருக்கலாம் என  பாகிஸ்தான் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம். ஆனால் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் பத்திரமாக நாடு திரும்புவார்கள் பாகிஸ்தான் நாட்டில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என நம்புகிறோம்’, என ரவீஷ் குமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News