ஆன்மிகம்
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம்

முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா இன்று நடக்கிறது

Published On 2021-09-06 06:57 GMT   |   Update On 2021-09-06 06:57 GMT
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா இன்று நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை, போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த 9-6-2020 அன்று தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக உயர்த்தினார். இதற்கான அறிவிப்பு விழா கடந்த 20-4-2021 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விழா ஒத்தி வைக்கப்பட்டது.

தற்பொழுது பசிலிக்கா அறிவிப்பு விழா அரசின் வழிகாட்டுதல்படி மிக எளிமையாக இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட பொறுப்பாளருமான அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்குகிறார்.

குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலய பங்குதந்தை செல்வன் மற்றும் பங்குமக்கள் சார்பில் பசிலிக்கா கொடி சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். கொடியை குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் ஜெரோம் தாஸ் ஏற்றி வைக்கிறார்.

தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை லத்தீன் மொழியில் பசிலிக்கா அறிவிப்பை வெளியிடுகிறார். அந்த அறிவிப்பை மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தமிழில் அறிவிக்கிறார்.

பசிலிக்கா லோகோவை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் மற்றும் முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன் ஆகியோர் வெளியிடுகிறார்கள். லோகோவை பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் அர்ச்சிக்கிறார்.

முளகுமூடு முதல் பங்குத்தந்தை விக்டர் குறித்த புத்தகத்தை தக்கலை மறைமாவட்ட ஆயர் ராஜேந்திரன் வெளியிடுகிறார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரத்தினம் மாதா பாடல் சி.டி.யை வெளியிடுகிறார். பசிலிக்கா சிறப்பிதழை அருட்பணியாளர் ரசல்ராஜ் வெளியிடுகிறார்.

தொடர்ந்து 9-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே பொதுமக்கள் யூ-டியூப் சேனலில் பார்த்து கொள்ளலாம்.

விழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபர் டோமினிக் கடாட்சதாஸ், இணை பங்குதந்தை தாமஸ், பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மோன்மணி, துணைச் செயலாளர் ஹெலன் மேரி, பொருளாளர் விஜி கலா மற்றும் அருட்பணி பேரவையினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News