வழிபாடு
சித்தூரில் மயானக்கொள்ளை திருவிழா

சித்தூரில் மயானக்கொள்ளை திருவிழா

Published On 2022-03-03 03:53 GMT   |   Update On 2022-03-03 03:53 GMT
சித்தூரில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் பெஸ்த தெரு குருவப்பா வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியையொட்டி மயானக்கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம்.

அதேபோல் நேற்று 189-ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா கோலாகலமாக நடந்தது. கோவிலில் இருந்து உற்சவர் அங்காள பரமேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, நையாண்டி மேளம் இசைக்க, கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் ஹை ரோடு, காந்தி சாலை, சந்தப்பேட்டை ரோடு உள்பட முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக வந்து, நீவா நதி கரையை அடைந்தது. அப்போது பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அம்மனுக்கு பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து ஆடி, பாடி வந்தனர்.

நீவாநதிக்கரையில் 55 அடி நீளத்தில் தட்சன் உருவப்பொம்மைைய சிறப்பு அலங்காரத்துடன் வடிவமைத்து வைத்திருந்தனர். தட்சனின் இரு கண்களில் 2 முட்டைகளை வைத்தனர். ஒரு பக்தர் மீது அங்காள பரமேஸ்வரியம்மன் அருள் வந்து ஆடி, கையில் வாளுடன் தட்சனை வாதம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தார். பின்னர் அந்த மூட்டைகளை பக்தர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

அந்த முட்டையை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும், குடும்ப கஷ்டம் தீரும், களிமண்ணால் செய்யப்பட்ட தட்சனின் மண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட்டால் உடல் நலப் பாதிப்பு சரியாகும். புதிய வீடு கட்டுபவர்கள் தட்சன் உருவ மண்ணை பூமி பூஜையில் வைத்து வீடு கட்டினால் நன்மை நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்ேகற்று அம்மனை வழிபட்டனர். அப்ேபாது பக்தர்கள் கொள்ளு, நவ தானிய சுண்டல் ஆகியவற்றை படையலிட்டு வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில் கோவில் தர்ம கர்த்தா, பிரதான அர்ச்சகர் குமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனா். பக்தர்களுக்கு அன்னதானம், மோர், குளிர்பானம் ஆகியவை வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News