செய்திகள்
கைது

ஆம்பூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மேஸ்திரியை கொன்ற தம்பதி கைது

Published On 2021-10-20 14:31 GMT   |   Update On 2021-10-20 14:31 GMT
ஆம்பூர் அருகே கள்ளக்காதல் தகராறில் கட்டிட மேஸ்திரியை கொன்று விட்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக நாடகமாடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:

வேலூர் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் ரசூல் ரஹ்மான் (வயது 41). இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரின் மனைவி சாந்தி (46) கட்டிட வேலை செய்த போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

இதை அறிந்த சாந்தியின் கணவர் கோட்டீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் கள்ளக்காதலர்களை பலமுறை கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

கடந்த 10-ந் தேதி ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது ரசூல் தடுமாறி கீழே விழுந்ததாக கூறி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் தகராறு காரணமாக ரசூலை சாந்தியின் கணவர் கோட்டீஸ்வரன் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

அதற்குள் கோட்டீஸ்வரன் தலைமறைவாகி விட்டார், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியில் நேற்று சுற்றித்திரிந்த கோட்டீஸ்வரன், மனைவி சாந்தி ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.சாந்தியும், ரசூல்ரஹ்மானும் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கோட்டீஸ்வரன் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் அதனை பொருட்படுத்தவில்லை. மனைவி சாந்தியை திருத்துவதற்காக கோட்டீஸ்வரன் கடந்த 3-ந் தேதி ஆம்பூரை அடுத்த பூஞ்சோலை நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு சாந்திக்கு உறவினர்கள் அறிவுரைகள் வழங்கினார்.

கடந்த 10-ந் தேதி சாந்தியை தேடி பூஞ்சோலை கிராமத்திற்கு ரசூல்ரஹ்மான் வந்தார். இதனை கோட்டீஸ்வரன் பார்த்து விடவே அவரை கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது, ஆத்திரமடைந்த கோட்டீஸ்வரன் அங்கிருந்த கல்லால் ரசூல்ரஹ்மானின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

படுகாயத்துடன் விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து மோட்டார் சைக்கிளில் வந்த போது தவறி விழுந்ததாக கூறி கோட்டீஸ்வரன் மற்றும் சாந்தி ஆகியோர் நாடகமாடியுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த ரசூல் ரஹ்மான் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்து விட்டதால் தன்னை பிடித்து விடுவார்களோ என கோட்டீஸ்வரன் மனைவியுடன் தலைமறைவானார்.

இந்த நிலையில் அவர்கள் தேவலாபுரம் பகுதியில் சுற்றித்திரிந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இதனையே அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் கட்டிட மேஸ்திரியைகொன்று விட்டு விபத்தில் சிக்கியதாக நாடகமாடிய தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News