செய்திகள்
பெட்ரோல்

பெட்ரோல்-டீசல் விலை உயருகிறது- லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு

Published On 2019-09-17 07:41 GMT   |   Update On 2019-09-17 07:41 GMT
சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.
புதுடெல்லி:

சவுதிஅரேபியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிணறு மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. உலகிற்கு தேவையான கச்சா எண்ணெயில் 10 சதவீதத்தை சவுதிஅரேபியா வழங்கி வருகிறது. அது தற்போது பாதியாக குறைந்து விட்டது.

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் சரியும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் உயர்ந்தது. நேற்று 13 சதவீதம் அதிகரித்தது.

கடந்த வாரம் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60 டாலராக இருந்தது. கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதும் அது 71.57 டாலராக உயர்ந்தது.

நேற்று சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 68.06 டாலராக இருந்தது. வரும் வாரங்களில் அது 70 டாலராக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு வளைகுடா போர் நடந்தபோது தான் கச்சா எண்ணெய் மிக உச்சத்தை தொட்டு இருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்ற விலை உயர்வை தற்போது கச்சா எண்ணெய் எட்டியுள்ளது.


கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்க்கு இந்தியா, வளைகுடா நாடுகளையே நம்பியுள்ளது. அதாவது ஆண்டு தோறும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதி செய்தே சமாளித்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் ஈராக், சவுதி அரேபியா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளிடம் இருந்துதான் இந்தியா அதிக கச்சா எண்ணெய்யை பெறுகிறது. கடந்த 2018-19-ம் ஆண்டு இந்தியா சுமார் 226 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து இருந்தது. இதில் ஈராக்கிடம் இருந்து 46.6 மில்லியன் டன், சவுதி அரேபியாவில் இருந்து 40.3 மில்லியன் டன், ஈரானில் இருந்து 23.9 மில்லியன் டன் கச்சா எண்ணெய் பெறப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதத்தை சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியா பெற்றிருந்தது. தற்போது இதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் வராது என்று சவுதிஅரேபியா தெரிவித்துள்ளது.

என்றாலும் சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்துள்ளதால், நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய்  அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் நிர்ப்பந்தத்துக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எம்.கே.சுராணா கூறுகையில், “கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம்” என்றார்.

இன்னும் சில தினங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தாலே இந்தியாவில் பெரிய அளவில் செலவு ஏற்படும். இது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை உருவாக்கும்.

குறிப்பாக இந்தியாவில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் சரிவை ஏற்படுத்தும். அதோடு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்களின் வாடகை கட்டணமும் உயரும். இது மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.

ஆனால் இத்தகைய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று இந்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய எண்ணெய் நிறுவனங்களில் அடுத்த 2 மாதத்துக்கு தேவையான கச்சா எண்ணெய் கை இருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பாதிக்காது என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 10 டாலர் மேலும் அதிகரித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும். இதனால்தான் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பங்கு சந்தைகளிலும் இந்திய பண மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தால் அது இந்திய பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Tags:    

Similar News