வழிபாடு
சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடந்ததையும், அதில் பங்கேற்ற திரளான பக்தர்களையும் படத்தில் காணலாம்.

பக்தர்களின் கண்களை குளமாக்கும் சப்தாவர்ண காட்சி

Published On 2021-12-21 08:58 GMT   |   Update On 2021-12-21 08:58 GMT
பண்டைய காலத்தில் இருந்து, மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுசீந்திரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானது, ‘சப்தாவர்ண காட்சி’ ஆகும்.
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கூட இந்த கோவிலை காண வருகிறார்கள். சிவன்- வி‌‌ஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒன்று கூடி இந்த கோவிலில் கொன்றையடியில் அருள்பாலிப்பது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அதிசயம் ஆகும்.

மார்கழி திருவிழாவின் 3-ம் நாள் கோட்டார் விநாயகர், வேளிமலை முருகன் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி சிலைகள் (சிவனின் மைந்தர்கள்) பெற்றோரின் தலமான சுசீந்திரத்துக்கு எடுத்து வரப்படும். மைந்தர்கள் இருவரும் ஒருவாரம் தந்தையுடன் தங்கி இருந்து விழாவை சிறப்பிப்பார்கள். அவர்கள் இங்கு தங்கும் காலத்தில் தாணுமாலய சுவாமி நகர்வலம் வரும்போது அவர்களும் உடன் செல்வார்கள்.

திருவிழாவின் 9-ம் நாள் விழாவில் அவர்கள் தங்கள் தந்தையை விட்டு பிரிந்து அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லும் காட்சியே சப்தாவர்ணம் என்று அழைக்கப்படுகிறது.

சப்தாவர்ணம் என்பது 7-வது பிரகாரத்தில் மட்டும் அதாவது சுசீந்திரம் நகரத்தின் பெரிய வீதியில் மட்டும் சுவாமிகள் எழுந்தருளுவது ஆகும். பெரிய வீதி என்பது 4 ரதவீதிகளையும் குறிக்கும். சப்தம் என்றால் 7 என்று பொருள். இதன் காரணமாக சப்தாவர்ணம் என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையில் தெய்வங்கள் இருக்கும் என்று பக்தர்கள் உணருகிறார்கள்.

நள்ளிரவில் ஒரு வாகனத்தில் விநாயகரும், 2 வாகனங்களில் முருகனும் எழுந்தருளுவார்கள். இன்னொரு வாகனத்தில் சிவன் எழுந்தருளுவார். பிரம்மனின் அன்ன வாகனத்தில் அம்பாள் எழுந்தருளுவார். இவர்கள் அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் காட்சி காண வந்த பக்தர்களை கண் கலங்க வைக்கும்.

சப்தாவர்ண நிகழ்ச்சி முடிந்த உடன் பெரும்பாலான பக்தர்கள் இரவு சுசீந்திரத்தில் தங்குவார்கள். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தெப்பக் குளத்தில் நீராடி, கோவிலின் சித்திர மண்டபத்தில் நடை பெறும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை காண செல்வார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் ஏராளமாக கூடுவார்கள்.

காரணம்

புதுமண தம்பதிகள் இந்த தரிசனத்தை காண்பதற்கு ஒரு காரணம் சொல்வது உண்டு.

முன்னொரு காலத்தில் திரேதாயுகா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் எந்த நேரமும் அன்னை பார்வதியை நினைத்து கொண்டே இருப்பாள். அவள் பூப்பெய்திய பிறகும் கூட பார்வதியை மறக்காமல் தினமும் பூஜை செய்து வழிபட்டாள். இதனால் பார்வதிக்கு பக்தை திரேதாயுகா மீது கருணை ஏற்பட்டது.

இந்த நிலையில் திரேதாயுகாவுக்கு திருமணம் நடந்தது. அந்த காலத்தில் திருமணம் நடந்த 4-வது நாளில் தான் சாந்திமுகூர்த்தம் வைக்கப்படும். ஆனால் திருமணம் முடிந்த 4 நாட்களுக்குள் அவளுடைய கணவர் இறந்து விட்டதால் திரேதாயுகா கதறி அழுதார். இத்தனை நாள் பார்வதியை வணங்கியும் இப்படி சோதித்து விட்டாளே என்று அழுது புலம்பினாள். இவளின் கூக்குரல் பார்வதியை எட்டியது. பார்வதி ஆத்திரம் அடைந்தார். தன் பக்தையை இப்படி சோதிக்கலாமா? என்று சிவபெருமானிடம் கேட்டு, திரேதாயுகாவின் கணவனை உயிர்ப்பிக்கும்படி விண்ணப்பித்தார்.

அப்படி செய்யும் வரை உங்களை (சிவ பெருமானை) தொட மாட்டேன் என்று சபதம் செய்தார். பார்வதியின் இந்த சபதத்தை கண்டு சிவன் கலங்கி போனார். திரேதாயுகாவின் கணவரின் உயிரை பறித்துசென்ற எமனை கூரிய பார்வை பார்த்தார். மன்மதனை சிவன் எரித்த காட்சி எமனின் கண் முன் அப்போது நிழலாடியது. பயந்து போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு சிவபெருமான் தம்பதி சகிதமாக காட்சி அளித்தனர்.

இந்த அரிய காட்சி மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நடந்தது. எனவே தான் புதுமண தம்பதிகள் காலமெல்லாம் ஒற்றுமையாய் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழ இந்த நிகழ்ச்சியை காண வருகிறார்கள். இதனால் தங்கள் தாலி பாக்கியம் நீண்ட நாள் நிலைக்கும் என்றும் பெண்கள் நம்புகிறார்கள்.

ஆருத்ரா என்றால் திருவாதிரை என்று பொருள் ஆகும். திருவாதிரை தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News