செய்திகள்
கலெக்டர் ஜெயகாந்தன்

ரேஷன் கடைகளில் கூட்டநெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசு - கலெக்டர் தகவல்

Published On 2020-01-09 16:16 GMT   |   Update On 2020-01-09 16:16 GMT
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாயும் அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து மாவட்டத்தில் அமைச்சா் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் கடந்த 5-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 12-ந்தேதி வரை பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது. இதில் வாங்க தவறியவர்களுக்கும், விடுப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அறிவிக்கப்படும்.

அதன்படி, குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுச் செல்லலாம். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News