உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் வாகன பார்க்கிங் வசதி செய்ய கோரிக்கை

Published On 2022-04-15 09:51 GMT   |   Update On 2022-04-15 09:51 GMT
உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் வாகன பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திருச்சி :

திருச்சி மாநகரில் உறையூரை அடுத்த குழுமணி சாலையில் காசிவிளங்கி பகுதியில் மொத்த மீன் மார்க்கெட் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக புத்தூர் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கிருந்து காசிவிளங்கி பகுதிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து அங்கு புதிதாக கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகள் அனைவரும் புதிய மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே காசிவிளங்கி மீன் மார்க்கெட் பகுதி சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.

மேலும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் வெளியூர்களிலிருந்து மீன் பாரம் ஏற்றிவரும் லாரிகள், கனரக வாகனங்கள், லோடு ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுகிறது.

இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்லமுடியாமலும், இருசக்கர வாகனங்களை கூட ஓட்டுச்செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

மேலும் உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் முக்கியமாக வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு வசதிகள் இல்லாதது தான் இத்தகைய போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகை செய்கிறது என்று பொது மக்கள் கூறுகிறார்கள். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் வாகன பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
உறையூர் காசிவிளங்கி மீன் மார்க்கெட்டை பொருத்தமட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் இங்கு மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். குறுகிய பகுதியான காசிவிளங்கி பகுதியில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது.

வாகன பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் இருபுறங்களிலும் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு மீன்களை இறக்குகிறார்கள். இதனால் அதிகாலை நேரம் முதலே அதிகமான வாகன நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறிது தூரம் செல்வதற்கே குறைந்தது ஒரு மணி நேரம் ஆவதாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவித்து செல்கிறார்கள். மேலும் இந்தப் பகுதியில் அதிகமான சமூகவிரோத செயல்கள் நடந்து வருவதால்போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News