செய்திகள்
விக்கிரமராஜா

கடையடைப்பு தொடர்பாக வணிகர்களிடமும் அரசு கருத்து கேட்க வேண்டும்- விக்கிரமராஜா

Published On 2021-04-28 12:26 GMT   |   Update On 2021-04-28 12:26 GMT
ஊரடங்கில் கடைகளை அடைக்க அரசு முடிவு எடுக்கும் போதும், கடை திறக்கும் நேரத்தை குறைக்கும் போதும் அதற்கு முன்னதாக வணிகர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு கருத்து கேட்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னையில் நேற்று வணிகர் பேரமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் வணிகர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அதன்பிறகு கடந்த 7 மாதங்களாகத்தான் கடைகள் திறந்து வியாபாரத்தை தொடங்கினார்கள். இதில் நிறைய வியாபாரிகள் இன்னும் கடனில் தான் தத்தளிக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் கொரோனா 2-வது அலையை காரணமாக வைத்து மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய கடைகள், மால்கள், தியேட்டர்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.



வணிகர்கள் எப்போதும் அரசு விதிமுறைகளை பின் பற்றிதான் வியாபாரம் செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது விதிமுறைகளுக்கு முரணாக அதிகாரிகள் அத்துமீறி அபராதம் விதிக்கிறார்கள். ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது மட்டுமின்றி கடைகளை பூட்டி சாவியையும் எடுத்து செல்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் இதே அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்தால் அந்தந்த துறை சார்ந்த அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

அரசு கடைகளை மூட உத்தரவிடும்போது அந்த கடைக்காரர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிறது. அவர்களுக்கு அரசு நிவாரணமும் கொடுப்பதில்லை. எனவே பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய நிவாரணங்கள், சலுகைகள், நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தர வேண்டும்.

ஊரடங்கில் கடைகளை அடைக்க அரசு முடிவு எடுக்கும் போதும், கடை திறக்கும் நேரத்தை குறைக்கும் போதும் அதற்கு முன்னதாக வணிகர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு கருத்து கேட்க வேண்டும்.

வணிகர்களிடம் கருத்து கேட்காமலேயே கடைகளை அடைக்க உத்தரவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதித்து வியாபாரம் செய்ய வியாபாரிகள் தயாராக இருக்கும் போது அரசு ஏன் பாரபட்சம் காட்டுகிறது.

சில கடைகளை திறக்க அரசு அனுமதிக்கிறது. சில கடைகளை திறக்க கூடாது என்கிறார்கள். அவர்களின் பிழைப்புக்கு என்ன செய்வார்கள். இரவு 7 மணிக்கு மேல் தான் தள்ளுவண்டியில் டிபன் கடை நடக்கிறது.

நடைபாதையில் பூ விற்கும் பெண்கள் மாலை 5 மணிக்கு தான் வியாபாரத்தை தொடங்குவார்கள். இப்போது அவர்கள் எல்லாம் வருமானம் இன்றி அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலை உள்ளது. சலூன் கடைக்காரர்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது.

எனவே அரசு பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந்தேதி வணிகர் பேரமைப்பு மாநாடு நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டை அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி நடத்த உள்ளோம்.

கொரோனா பரவாமல் இருக்கும் வகையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மண்டல நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் நிர்வாகிகளின் வருகையை குறைத்து மாநாட்டை நடத்த உள்ளோம். கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டும் இந்த மாநாட்டில் அனுமதிக்க உள்ளோம்.

38-வது வணிகர் தின மாநாட்டை இந்திய வணிகர் பேரிடர் விடியல் மாநாடாக அறிவித்து இந்த மாநாட்டில் நலிந்த வணிகர்கள், சலவை தொழிலாளர்கள், பூ வியாபாரிகள் என 1000 பேர்களுக்கு நிதி உதவிகள் வழங்க உள்ளோம். மேலும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News