செய்திகள்
சாலையோர கடைகள் அகற்றப்பட்டதையும், கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்ததையும் படத்தில் காணலாம்.

திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகே சாலையோர காய்கறி கடைகள் அகற்றம்

Published On 2021-10-19 10:07 GMT   |   Update On 2021-10-19 11:09 GMT
சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியிலேயும் திருப்பூர் பல்லடம் சாலையோரத்திலும் வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் உழவர் சந்தை திட்டத்தை அமல்படுத்தினார். இதன்படி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை உழவர் சந்தையில் தாங்களே விற்பனை செய்து கொள்ளலாம். இடைத்தரகர்கள் தலையீடு இருக்காது. 

இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் 120 கடைகள் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளனர்.

ஆனால் சமீபகாலமாக உழவர் சந்தைக்கு வெளியிலேயும் திருப்பூர் பல்லடம் சாலையோரத்திலும் வியாபாரிகள் காய்கறி கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர். இதன்காரணமாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் .

அதுமட்டுமின்றி சாலையோரக் கடைகளால் தென்னம்பாளையம் பகுதியில் அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசலும் இருந்து வந்தது. எனவே சாலையோர கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோரி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் உத்தரவின்பேரில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி சுமார் 50 - க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை அப்புறப்படுத்தினர்.

மேலும் இனிமேல் சாலையோர கடைகள் அமைக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் விடுத்தனர். மேலும் சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர கடைகள் அனைத்தும் தற்போது அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாநகராட்சி உத்தரவை மீறி மீண்டும் சாலையோர கடைகள் அமைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமிஷனர் எச்சரித்துள்ளார். 
Tags:    

Similar News