செய்திகள்
பேஸ்புக்

சேலம் உதவி கமி‌ஷனர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு: மோசடியில் ஈடுபட வடமாநில கும்பல் முயற்சி

Published On 2020-09-15 09:13 GMT   |   Update On 2020-09-15 09:13 GMT
சேலம் உதவி கமி‌ஷனர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பணமோசடியில் ஈடுபட முயன்ற வடமாநில கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டின் பின்கோடு நம்பரை பெற்று பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு அழைக்கும் நபர்களை உண்மை என நம்பி கார்டு நம்பரை கொடுப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தை சில நிமிடத்தில் எடுத்துக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில் போலீஸ் உதவி கமி‌ஷனர் பெயரில் இந்த மோசடி கும்பல் களம் இறங்கி உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சேலம் அஸ்தம்பட்டியில் உதவி கமி‌ஷனராக இருப்பவர் அனந்தகுமார். இவரது பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய நபர்கள் உடனடியாக ரூ. 20 ஆயிரம் தேவைப்படுகிறது எனவும், பணத்தை நாளைக்கே கொடுத்து விடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனை பார்த்து கமி‌ஷனரின் நண்பர்கள் அவருக்கு போன் செய்து விசாரித்தபோது மர்மநபர்கள் சிலர் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த போலி கணக்கை முடக்கும்படியும் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சேலம் சைபர் கிரைம் பிரிவில் உதவி கமி‌ஷனர் அனந்தகுமார் புகார் கொடுத்தார்.

முதற்கட்ட விசாரணையில் மத்திய பிரதேசத்தில் இருந்து இந்த கும்பல் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News