செய்திகள்
மரணம்

ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி- தவறான சிகிச்சை காரணமா?

Published On 2021-04-07 13:32 GMT   |   Update On 2021-04-07 13:32 GMT
சிறுமி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென இறந்தது அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் பவுல் பெல்சிங். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பவுல் கேரளாவிற்கு பூ, காய்கறி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.

இவரது 2-வது மகள் ஐடா(வயது 7) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று பவுல் தனது மகள் ஐடாவை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் காய்ச்சல் இருப்பதாக கூறி ஊசி போட்டுள்ளனர். இந்நிலையில் ஊசி போட்டதில் இருந்து ஐடாவிற்கு உடலில் கொப்புளங்கள் தோன்றி உள்ளது. மேலும் உடலில் ஒருசில இடங்களில் ரத்தமும் கொட்டி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை உடனடியாக நெல்லையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் சிறுமியை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு கூறி உள்ளனர்.

ஆனால் அழைத்து சென்ற வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிறுமி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென இறந்தது அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறுமிக்கு ஊசி போட்டதில் அவருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டதால் தவறான சிகிச்சை ஏதும் அளிக்கப்பட்டதில் சிறுமி உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News