செய்திகள்
மழை

கோத்தகிரியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-09-22 12:37 GMT   |   Update On 2019-09-22 12:37 GMT
கோத்தகிரியில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக மலைகாய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கடும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் தீமுட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். காலையிலும் தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இரவு பெய்த மழைகாரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதேபோல் தட்டபள்ளம், அளக்கரை, குஞ்சப்பனை, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கோத்தகிரியில் 10 மி.மீ மழையும், கோடநாடு பகுதியில் 8 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதேபோல் குன்னூர் பகுதியிலும் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மலைகாய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News