செய்திகள்
மாணவிகள்

பிளஸ்-2 மாணவர்களுக்கான வகுப்பு மீண்டும் தொடங்கியது

Published On 2021-04-08 07:09 GMT   |   Update On 2021-04-08 07:09 GMT
புனிதவெள்ளி, சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 2-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னை:

கொரோனா தொற்று காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.

புனிதவெள்ளி, சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 2-ந்தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டதால் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த முடியாத நிலை உருவானது.

இந்தநிலையில் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக அனைத்து பள்ளிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

அரசு, மாநகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன. வகுப்பறைகள், கழிவறைகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன.

இதையடுத்து இன்று பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வழக்கம்போல் சைக்கிள்களிலும், பேருந்துகளிலும் சென்றனர்.



கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால் முக கவசம் கட்டாயம் அணியவும், கிருமி நாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மாணவ-மாணவிகள் போதிய இடைவெளியுடன் அமர்ந்து வகுப்புகளில் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். கொரோனா தொற்று மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் மாணவர்கள் வருகை குறைந்துள்ளது.

இன்று 70 சதவீதம் பேர் மட்டுமே வகுப்புகளுக்கு வந்திருந்தனர். வருகிற 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பொதுத்தேர்வு மே மாதம் 3-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News