இஸ்லாம்
இஸ்லாம் வழிபாடு

இஸ்லாம் கூறும் சமூக ஒழுக்கங்கள்...

Published On 2022-01-11 03:20 GMT   |   Update On 2022-01-11 03:20 GMT
“அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)
தனக்கும், தன் அருகில் வாழும் மனிதர்களுக்கும் பேச்சுக்களாலும், செயல்களாலும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே சமூக ஒழுக்கம். வாழும் காலமெல்லாம் இவை நம்முடன் பயணிப்பது, நம்மை மேன்மக்களாக சமூகத்தில் உயர்த்தச் செய்யும்‌. அண்டை வீட்டில் வசிப்பவர்களுடன் அன்போடு பழக இவ்வாறு வழி காட்டுகிறது இஸ்லாம்:

“மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)

“இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

வீதிகளில் அமரும் போதும், வீதிகளைக் கடக்கும் போதும் சில ஒழுக்கங்களை இஸ்லாம் போதிக்கின்றது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல், சாலைகளை கடப்பவர்களுக்கு உதவுதல், அவர்களுக்கு அரணாக மாறுதல் தர்மம் என்கிறது இஸ்லாம். இதுகுறித்த நபி மொழி வருமாறு:

‘நீங்கள் பாதைகளில் அமர்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறினார்கள். ‘நாங்கள் அமர்ந்து பேசுவதற்கு வேறு இடம் இல்லையே’ என்று நபித் தோழர்கள் வினா எழுப்பினர். ‘அப்படியென்றால் பாதைக்கான கடமைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்’ என்று நபி (ஸல்) கூற, ‘பாதைக்கான கடமைகள் என்றால் என்ன?’ மறுபடியும் நபித் தோழர்கள் கேட்க, ‘பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், தொந்தரவு செய்யாமல் இருங்கள், முகமன் கூறுங்கள், நல்லவற்றை ஏவி தீமைகளைத் தடுங்கள்’ என்று பாதைகளுக்கான கடமைகளைப் பட்டியலிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.

நம்மையும், நம்மைச் சுற்றியும் வசிக்கும் மாற்று மத நண்பர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுதல் வேண்டும். இதை இறைவனே தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

“அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)

‘ஒருவர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார், (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

தும்மும் போது கைக்குட்டையைக் கொண்டு மூடிக்கொள்ளுதல், கொட்டாவி விடும் நேரத்தில் கைகளால் வாயை மூடிக் கொள்ளுதல், எச்சில் துப்பினால் மண் கொண்டு மூடுதல், சபை நாகரீகம் கருதி பேசுதல், இவை அனைத்தும் சமூக ஒழுக்கத்தின் முக்கிய தூண்களாகும். பேச்சுகளையும், செயல்களையும் மனித சமூகத்திற்கு எதிராக இல்லாமல் பார்த்துக்கொள்வது சமூக ஒழுக்கமாகும். இதைப் பேணுதலில் உலக அமைதி பிறக்கிறது. சமூக ஒழுக்கத்தை திருக்குர்ஆனும், நபி மொழியும் பல இடங்களில் இவ்வாறு பதிவு செய்கின்றன.

ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
Tags:    

Similar News