உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்கள்

Published On 2022-01-29 10:31 GMT   |   Update On 2022-01-29 10:31 GMT
3 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் திருப்பூர் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு என்பது தொடர்ந்து  நீடித்து  வருகிறது. கடந்த  சில மாதங்களாக 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். 

இதையடுத்து பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருப்பூர் பல்லடம் சாலையில் பொதுமக்கள் காலிகுடங்களுடன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும் இன்னும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

 3 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும் திருப்பூர் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே 4-வது குடிநீர்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குடிநீர் விநியோகிக்கப்படாததால் பெரும்பாலான பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பலர் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். அந்த சமயங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படாததால் அதனை பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே எந்த பகுதிக்கு எந்த நேரத்தில் குடிநீர் விநியோகிக்கப்படும் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக காலையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News