செய்திகள்
ஏற்காடு அண்ணா பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2020-11-23 08:34 GMT   |   Update On 2020-11-23 08:34 GMT
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் சுற்றிப்பார்த்தனர். சிலர் ‘செல்பி‘ எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சுற்றுலாதலமாக உள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள ஏற்காடுக்கு சேலம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து சுற்றிப்பார்த்து விட்டு செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். ரோஜா தோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்வார்கள். கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக சுற்றுலா பயணிகள் ஏற்காடுக்கு வரவில்லை. தற்போது ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இதேபோல் நேற்றும் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.

நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதை தொடர்ந்து கடும் குளிர் நிலவியது. அதை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் சுற்றிப்பார்த்தனர். சிலர் ‘செல்பி‘ எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குளிருக்கு இதமாக சாலையோர கடைகளில் மிளகாய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர். சாலையோர கடைகளில் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. ரோஜா தோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பூக்களை பார்வையிட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக வாகனங்கள் முக்கிய சாலைகளில் ஊர்ந்து செல்வதைபோல் சென்றன.
Tags:    

Similar News