செய்திகள்
என்ஐஏ

தமிழகத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் - கைதான 16 பேர் வீடுகளில் சோதனை

Published On 2019-07-20 07:01 GMT   |   Update On 2019-07-20 07:01 GMT
தமிழகத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் திட்டி கைதான 16 பேர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை:

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 259 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு தலைமை பொறுப்பு ஏற்று நடத்திய ஜக்ராம் ஆசிமுடன் தமிழகத்தைச் சேர்ந்த பலர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிர விசாரணை நடத்தியது. அப்போது தமிழகத்திலும் மிகப் பெரிய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பேன் இந்தியா ஆபரே‌ஷன் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி ஐ.எஸ். ஆதரவாளர்களை வேட்டையாடும் அதிரடி வேலை தொடங்கி உள்ளது.

அதன் முதல் கட்டமாக கடந்த சனிக்கிழமை சென்னை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அசன்அலி, முகமது யூசுப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் துபாயில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 ஐ.எஸ். ஆதரவாளர்கள் நாசவேலை சதி திட்டத்துக்கு நிதி திரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவர்களையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

கைதான 16 பேரும் சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த 16 பேரும் “அன்சருல்லா” என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்த முயன்றதும் அதற்காக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவர்கள் 16 பேரும் தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாற திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே “அன்சருல்லா” இயக்கத்தை அடியோடு கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

 


அதன் அடிப்படையில் 16 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு செய்தனர். அதை ஏற்று வருகிற 26-ந்தேதி வரை 8 நாட்களுக்கு 16 பேரையும் விசாரிக்கலாம் என்று கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து 16 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 16 பேரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, தேனி, மேலபாளையம், முத்துப்பேட்டை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது.

சென்னையில்  தவ்பிக் முகமது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 6 அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முகமது கனி மகன்களான மீரான், முகமது அப்சல் ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சீனிவாச ராவ் என்பவரது தலைமையில் போலீசார் இன்று காலை 6.10 மணிக்கு வந்து வீட்டில் இருந்த ஆவணங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்த தகவல்கள், செல்போனில் தொடர்பு கொண்ட எண்கள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை சேகரித்தனர்.

மேலும் முகமது அப்சல் மற்றும் மீரான் ஆகியோரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தென்ன மரக்காயர் தெருவை சேர்ந்த முகமது மைதீன் மகன் அகமது அசாருதீன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சோதனை செய்வதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று முத்துப்பேட்டை வந்தனர்.அப்போது அகமது அசாருதீன் வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கிராமநிர்வாக அலுவலர்கள் தினேஷ்குமார், இமானுவேல் ஆகியோருடன் அகமதுஅசாருதீன் உறவினர்கள் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 


நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மடப்புரம் ஜின்னா தெருவை சேர்ந்தவர் முகமது பதானி மகன் முகமது இப்ராகிம் (வயது55). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக துபாயில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆவார்.

இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மடப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருவதில்லை. இதனால் வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.50 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் மடப்புரத்தில் உள்ள முகமது இப்ராகிம் வீட்டிற்கு சோதனைக்காக வந்தனர். பின்னர்அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், முகமது இப்ராகிம் தம்பி முகமது ரசீத் மற்றும் ஊர்க்காரர்கள் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தியபோது அங்கு எந்த உடைமைகளோ, பொருட்களோ இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 3 பேரும் 7.50 மணியளவில் திரும்பி சென்றனர்.

கைதான 16 பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரபிஅகமது, பைசுல், முன்சகீர், முகை தீன் சாகுல் ஹமீது, வாலி நோக்கம் பாரூக், மதுரை நரிமேடு முகமது ஷேக் மைதீன் ஆகியோரும் அடங்குவார்கள். இவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று ராமநாதபுரம் வந்தனர்.

கீழக்கரையில் 4 பேரின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை விசாரணை நடத்தினர்.

இதேபோல் மதுரை நரிமேடு பி.டி.ஆர். நகர் 5-வது தெருவில் உள்ள முகமது ஷேக் மைதீன் வீட்டிற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள், உள்ளூர் போலீசார், அதிரடி படையினர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்று சோதனை நடத்தினர். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் செல்போன்களையும் வாங்கி ஆய்வு செய்தனர். அதில் ஆவண பரிமாற்றம், வாட்ஸ்-அப், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

முகமது ஷேக் மைதீன் மூலம் மதுரையில் வேறு யாருக்கும் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதேபோல் முகமதுஷேக் மைதீனின் பேராசிரியர் ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடை பெற்றது.

பெரம்பலூர் லெப்பைக்குடிக்காட்டில் உள்ள குலாம்நபி ஆசாத் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இன்று காலை சோதனை செய்தது.

குலாம்நபி ஆசாத் வீட்டில் அவர் பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போன், சிம்கார்டுகள், பயன்படுத்தாத சிம்கார்டுகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.அவரது நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

நெல்லை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாரில் உள்ள முகமது இப்ராகிம் வீட்டிற்கு இன்று அதிகாலை 6 மணியளவில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் உடன் வந்தனர்.

அவர்கள் அந்த தெருவுக்குள் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. முகமது இப்ராகிம் வீட்டிற்கு சென்று அங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன. ரகசிய தஸ்தாவேஜுகள் ஏதேனும் உள்ளதா? கம்ப்யூட்டரில் ஏதேனும் தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

மேலும் முகமது இப்ராகிம் குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் அனைத்து செல்போன் எண்களையும் கேட்டு, அதில் யார்? யார்? தொடர்பு கொண்டுள்ளார்கள். சந்தேகப்படும் படியான எண்கள் உள் ளதா? என்றும் ஆய்வு செய்தனர். செல்போனில் பயன்படுத்தாமல் ஏதேனும் சிம்கார்டுகள் தனியாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை நடத்தினார்கள்.

Tags:    

Similar News