ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூச்சாண்டி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூச்சாண்டி சேவை

Published On 2021-08-20 06:50 GMT   |   Update On 2021-08-20 06:50 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூச்சாண்டி ேசவை நேற்று நடைபெற்றது. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழா வருகிற 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் இரண்டாம் நாளான நேற்று கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர் உற்சவர் உள்பட சிறிய பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்த விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ரோத்சவம் என்ற பெயரில் நடைபெறுகிறது.

இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்த பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டிசேவை எனப்படும் அங்க, உபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பவித்ரோத்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 24-ந் தேதி மாலை உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளுகிறார். 26-ந் தேதி காலை சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பிடப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News