உள்ளூர் செய்திகள்
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் பொதுமக்களுக்கு தடை

Published On 2022-01-11 11:23 GMT   |   Update On 2022-01-11 11:23 GMT
கோவில் விழாக்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தினால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி சொர்க்கவாசல் திறப்பு விழாவின்போது பொதுமக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

மேலும் முகூர்த்த நாட்களில் குறைந்தபட்சம் 150 முதல் 350 திருமணங்கள் வரை நடைபெறும். இக்கோவிலில் வருடந்தோறும் சொர்க்க வாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 162 பேருக்கு தொற்று பரவல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்‌.

இந்த நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வருகிற 13-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 3 ந் தேதி திங்கட்கிழமை முதல் பகல் பத்து உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

இன்று 9-ம் நாள் பகல்பத்து உற்சவம் வெகு விமரிசையாக கோவில் உட்புறத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை மறுதினம் காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு விசுவரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெறுகிறது.

பின்னர் காலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் தேசிகர் முன்னின்று தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள உள்ளார். தொடர்ந்து தமிழக அரசு ஏற்கனவே கோவில் விழாக்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தினால் சொர்க்கவாசல் திறப்பு விழாவின்போது பொதுமக்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 6 மணி முதல் வழக்கம்போல் சாமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி 6 மணிக்கு மேல் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக சாமி கும்பிட்டு செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News