செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு செய்த புகைப்படம்... குழந்தை உரிமைகள் அமைப்பு நோட்டீஸ்

Published On 2021-08-04 15:46 GMT   |   Update On 2021-08-04 15:46 GMT
போக்சோ சட்டத்தை மீறி, பெற்றோரின் புகைப்படத்தை ட்வீட் செய்வதன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று குழந்தை உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது.
புதுடெல்லி:

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த 1ம் தேதி தலித் சிறுமி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.. அது மட்டுமின்றி சிறுமியின் உடல், வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வரை துணை நிற்பதாக தெரிவித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம், சிறுமியின் பெற்றோர், ராகுல் காந்தியுடன் காருக்குள் அமர்ந்து பேசியபோது எடுக்கப்பட்டது. அதில், பெற்றோரின் முகம் தெளிவாக தெரிகிறது. சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த புகைப்படம் இருப்பதால், சர்ச்சை எழுந்துள்ளது.



இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்துக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டுவிட்டர் இந்தியாவின் குறைதீர் அதிகாரிக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், போக்சோ சட்டத்தை மீறி, பெற்றோரின் புகைப்படத்தை ட்வீட் செய்வதன் மூலம் சிறுமியின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உடனடியாக ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி அந்த பதிவை நீக்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவர், சிறுமிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய எந்த தகவலையும் அல்லது புகைப்படத்தையும் வெளியிடுவது சட்டவிரோதமானது என்று டுவிட்டர் இந்தியாவுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நினைவுபடுத்தி உள்ளது.
Tags:    

Similar News