உள்ளூர் செய்திகள்
பனிப்பொழிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-01-22 10:28 GMT   |   Update On 2022-01-22 10:28 GMT
கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தை மாதம் தொடங்கியது முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்ட மக்கள் அனைவரும் கடும் குளிரால் அவதியடைந்து வந்தனர்.
விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 25-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.

அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானதால் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்த பலத்த மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டின. இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் தை மாதம் தொடங்கியது முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்ட மக்கள் அனைவரும் கடும் குளிரால் அவதியடைந்து வந்தனர்.

இன்று காலை விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மூடுபனியால் வாகன ஓட்டிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். இந்த கடும் மூடுபனியால் விழுப்புரம் சென்னை சாலை விழுப்புரம் புதுவை சாலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக சென்றதை காண முடிந்தது.

தற்போது கும்பகோணம் சாலையை 4 வழி சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இந்த மூடு பனி காரணமாக வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் ஆங்காங்கே விழுந்து விபத்துக்குள்ளாகி செல்லும் அவல நிலையை காண முடிந்தது.
Tags:    

Similar News