செய்திகள்
மழைநீரில் வாகனங்கள் மூழ்கி உள்ள காட்சி

புதுவை வெள்ளக்காடானது- ஒரே நாளில் 19 செ.மீ. மழை

Published On 2021-11-19 08:55 GMT   |   Update On 2021-11-19 10:19 GMT
மழை காரணமாக புதுவையில் இதுவரை 62 குடிசைகள், 27 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் பெரிய ஏரிகளான பாகூர், ஊசுடு உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது.

தென்பெண்ணை, மலட்டாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே கடந்த சில நாட்களாக மழை விட்டு இருந்தது. நேற்று காலை மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

காலை 9 மணி அளவில் கனமழை கொட்ட தொடங்கியது. இந்த மழை மாலை 4 மணி வரை நீடித்தது.

தொடர்ந்து 7 மணி நேரம் பெய்த மழையால் புதுவை வெள்ளக்காடானது. புதுவையில் தாழ்வான பகுதிகளான பாவாணர் நகர், ரெயின்போ நகர், எழில் நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

கிழக்கு கடற்கரை சாலை, புஸ்சி வீதி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, மறைமலை அடிகள் சாலை, புதுவை-கடலூர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தும் முடங்கியது.

புதுவை ரெயில் நிலையம் அருகே பழமையான மரம் மற்றும் தவளக்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே இருந்த மரம் முறிந்து விழுந்தது. பொதுப்பணித்துறையினர் மரத்தை அகற்றினர். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டு மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மழை காரணமாக புதுவை பள்ளி-கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



மழை காரணமாக புதுவையில் இதுவரை 62 குடிசைகள், 27 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க 194 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மீட்பு, நிவாரண பணிகளில் உதவுவதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கலெக்டர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலை லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.


Tags:    

Similar News