உள்ளூர் செய்திகள்
கைது

மனைவி வேலை பார்த்த அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர் கைது

Published On 2022-05-06 08:55 GMT   |   Update On 2022-05-06 08:55 GMT
வடபழனியில், நடத்தையில் சந்தேகத்தால் மனைவி வேலை பார்த்த அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. வீடுகளுக்கு பால் பாக்கெட் சப்ளை செய்து வருகிறார்.

முதல் மனைவியை பிரிந்த இவர் 2வதாக இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வடபழனியில் உள்ள தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் விஷ்ணுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் மனைவி வேலை பார்த்து வரும் அலுவலகத்திற்கும் நேரில் சென்று விஷ்ணு தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக மன வேதனை அடைந்த விஷ்ணுவின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் கோபத்தில் இருந்த விஷ்ணு, சம்பவத்தன்று இரவு, மனைவி வேலை பார்த்து வரும் வடபழனியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

மேலும் பெட்ரோல் குண்டு வீசியதை வீடியோவாக பதிவு செய்து அதனை மனைவியின் செல்போனுக்கும் அனுப்பி மிரட்டல் விடுத்தார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் தனசேகரன் வடபழனி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், ஏட்டு வெங்கடப்பன், வேலாயுதம் தலைமையிலான தனிப்படை போலீசார் ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் போக்சோ, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News