செய்திகள்
கைது

4 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ. 4700 கோடி மோசடி செய்த வாலிபர் கைது

Published On 2020-09-13 10:29 GMT   |   Update On 2020-09-13 10:29 GMT
4 மடங்கு பணம் தருவதாக கூறி ரூ. 4700 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

கோவை பீளமேடு பி.ஆர். புரத்தை சேர்ந்தவர் கவுதம் ரமேஷ் (வயது 40).இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 3 நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனங்களில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் ரூ. 4 லட்சமாக திருப்பி தரப்படும் என கவர்ச்சியாக விளம்பரங்கள் செய்தார். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்தனர்.

கேரளாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவரது நிறுவனத்தில் கோடிக் கணக்கில் முதலீடு செய்தனர். தமிழ்நாட்டிலும் ஏராளமானோர் முதலீடு செய்தார்கள். சேலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிதி நிறுவனங்களை மூடிவிட்டு கவுதம் ரமேஷ் தலைமறைவானார். இதுபற்றி கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதம் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேரை தேடி வந்தனர்,

தமிழ்நாட்டில் சேலம், கோவை மாநகர போலீஸ் நிலையங்களிலும் கவுதம் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலத்தில் 70 பேர் கொடுத்த புகாரின் பேரில் ரூ. 4½ கோடி வரை மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

இந்த நிலையில் கவுதம் ரமேஷ் சேலத்தில் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் கவுதம்ரமேஷ் தமிழ் நாட்டில் கோவை, சேலம் கரூர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரூ. 1200 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

கேரளாவில் மட்டும் ரூ.3500 கோடி வரை மோசடி செய்துள்ளார். இதனிடையே கவுதம்ரமேஷ் கைதான விவரம் கேரளா போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து கேரள போலீசார் இன்று சேலம் வந்தனர். கைதான கவுதம் ரமேஷிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

தலைமறைவான அவரது கூட்டாளிகளை கைது செய்யும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கவுதம் ரமேஷின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News