செய்திகள்
இந்திய - அமெரிக்க மந்திரிகள்

தங்கள் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணைநிற்கும் - மைக் பாம்பியோ

Published On 2020-10-27 10:32 GMT   |   Update On 2020-10-27 10:32 GMT
தங்கள் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணைநிற்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை (2+2 பேச்சுவார்த்தை) நடந்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்றது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பெர்க் உடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூட்டாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு மந்திரிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

இந்த சந்திப்பின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறியதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்காக கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களால் உயிரிழந்த 20 வீரர்கள் உள்பட அனைத்து இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று நாங்கள் அஞ்சலி செலுத்தினோம்.  

நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்துபவர்களை எதிர்த்து நிற்கும் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்.  சீனாவின் கம்யூனிச அரசாங்கம் மட்டுமல்ல அனைத்து வகையிலான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த வரும் இரு நாடுகளும் சைபர் தாக்குதல் விவகாரம், இந்திய பெருங்கடலில் கடற்படை போர் பயிற்சியில் இணைந்து செயல்பட ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

இன்றைய பேச்சுவார்த்தையில் சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரசை வீழ்த்த ஒருங்கிணைந்து செயல்படுவது முதல் பிராந்திய நிலைத்தன்மை, அமைதியை நிலைநாட்டல், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சீன கம்யூனிச அரசு வரை விவாதிக்கப்பட்டது. 

என்றார்.    
Tags:    

Similar News