செய்திகள்
ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

மேற்கு வங்காளத்தில் 3-வது கட்ட தேர்தல்... 31 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published On 2021-04-06 05:06 GMT   |   Update On 2021-04-06 09:00 GMT
ஓட்டுப்பதிவின் போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்துக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

கடந்த 27-ந் தேதி முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கும், கடந்த 1-ந் தேதி 2-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று காலையில் இருந்தே தங்களது வாக்கை செலுத்த தொடங்கினார்கள். இதனால் பல இடங்களில் விறுவிறுப்பாக இருந்தது. கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளின்படி ஓட்டுப்பதிவு நடந்தது.

3-வது கட்ட ஓட்டுப் பதிவில் சுமார் 78.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 205 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


பா.ஜனதா மூத்த தலைவர் ஸ்வபன் தாஸ்குப்தா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மந்திரியுமான அஷிமா பத்ரா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் காந்தி கங்குலி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த சிலர் தேர்தலில் போட்டியிடுவது திரிணாமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

2-வது கட்ட வாக்குப்பதிவின் போது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது.

இதனால் இன்றைய 3-வது கட்ட ஓட்டுப்பதிவின் போது அத்தகைய அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 618 பாதுகாப்பு படை குழுக்கள் வாக்குச்சாவடியை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மத்திய ஆயுத காவல் படையினருக்கு ஆதரவாக மாநில காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாக்குப்பதிவு நடை பெறும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நடைபெறும் 10,871 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-இடது சாரி கூட்டணி இடையே 3 முனைப்போட்டி நிலவுகிறது. இதில் ஆட்சியை பிடிப்பதற்கு திரிணாமுல் காங்கிரஸ்- பா.ஜனதா இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இன்று வாக்குப்பதிவு நடை பெறும் 31 தொகுதிகளில் கடந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் 30 இடங்களையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றி இருந்தது.

Tags:    

Similar News