செய்திகள்
வெற்றி பெற்ற டெல்லி அணி வீரர்களுக்கு டோனி உள்ளிட்ட சி.எஸ்.கே.வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

இரவு 7.30 மணிக்கு போட்டியை தொடங்கியதால் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு பாதிப்பு - டோனி விளக்கம்

Published On 2021-04-11 08:14 GMT   |   Update On 2021-04-11 08:14 GMT
தொடக்க ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் சி.எஸ்.கே.ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

மும்பை:

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது.

மும்பையில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது.

ரெய்னா 36 பந்தில் 54 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), மொய்ன் அலி 24 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சாம் கரண் 15 பந்தில் 34 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ்வோக்ஸ், அவேஷ்கான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 8 பந்து எஞ்சி இருந்த நிலையில் 189 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்களான ஷிகர் தவான் 54 பந்தில் 85 ரன்னும் ( 10 பவுண்டரி, 2 சிக்சர்), பிரித்வி ஷா 38 பந்தில் 72 ரன்னும் (9 பவுண்டரி 3 சிக்சர்) எடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 138 ரன் குவித்தனர். ‌ஷர்துல்தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

தொடக்க ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியதால் சி.எஸ்.கே.ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். போட்டியை இரவு 7.30 மணிக்கு தொடங்கியதால் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு பாதிப்பு இருந்ததாக சி.எஸ்.கே. கேப்டன் டோனி தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து அவர் கூறும்போது இதை தெரிவித்தார்.

ஐ.பி.எல்.போட்டிகள் இந்தியாவில் இரவு 8 மணிக்குதான் தொடங்கும். தற்போது 7.30 மணிக்கே தொடங்கி உள்ளது. இது முதலில் பந்து வீசும் அணிக்கு சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த அணிக்கு பாதிப்பாக இருந்தது.

30 நிமிடத்துக்கு முன்னதாக போட்டியை தொடங்கியதால் பனியின் பாதிப்பு இருந்தது. இது 2-வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகவே அமைந்தது.

எங்களது பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடி 188 ரன்னை எடுத்தனர். தொடக்கத்தில் நாங்கள் தடுமாறினோம். இதற்கு பனி காரணமாக இருந்தது. பின்னர் நாங்கள் அபாரமாக ஆடினோம். நேரம் செல்ல செல்ல பனித்துளியால் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது.

அதேநேரத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் தங்களுக்கு சாதகமாக இருந்ததை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கூறும்போது, ‘‘எங்களது பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ‘டாசை’ நாங்கள் வென்றது சிறப்பானது.

டோனியிடம் இருந்து நான் பல வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன். தவானும், பிரித்விஷாவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பவர்பிளேயில் அவர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்’’ என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 16-ந் தேதி மும்பையில் நடக்கிறது.

டெல்லி அணி அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 15-ந் தேதி (மும்பை) சந்திக்கிறது. 

Tags:    

Similar News