ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா

கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள்: அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா

Published On 2020-11-27 03:03 GMT   |   Update On 2020-11-27 03:03 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் விழாவான அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோவிலில் 7-ம் நாள் விழா நடைபெற்றது. வழக்கமாக 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக கோவிலின் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது.

முன்னதாக காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகள் கோவில் ராஜகோபுரத்தின் முன்பு வந்தனர்.

அதை தொடர்ந்து விநாயகர் மற்றும் முருகர் மர விமானங்களிலும், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வெள்ளி விமானங்களிலும் எழுந்தருளினர். காலை சுமார் 7.50 மணியளவி்ல் மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா தொடங்கி 9 மணியளவில் நிறைவடைந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 29-ந் தேதி(நாளை மறுநாள்) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
Tags:    

Similar News