செய்திகள்
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ராட்சத பள்ளம்

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் திடீர் பள்ளம்- பஸ் போக்குவரத்து மாற்றம்

Published On 2021-10-08 14:54 GMT   |   Update On 2021-10-08 14:54 GMT
30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அந்த குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி அந்த பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் இந்த திடீர் பள்ளத்தால் எந்த பாதிப்பும் பொது மக்களுக்கு ஏற்படவில்லை.

சாலையில் 20 அடி ஆழத்திற்கு இந்த பள்ளம் உருவாகி பொது போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. இந்த பள்ளத்தை அப்பகுதி மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.

தகவல் அறிந்த போலீசார் அந்த சாலையின் போக்குவரத்தை நேற்று மாலையில் இருந்தே நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், மூலக்கடை, செங்குன்றம், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளுக்கு செல்லக் கூடிய இந்த சாலை மூடப்பட்டதால் மாநகர பஸ்கள் வேறு பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளன.

அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டு இருந்தன. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ராட்சத பள்ளம் ஏற்படுவதற்கு பழமை வாய்ந்த கழிவுநீர் குழாய் உடைந்ததே காரணமாகும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அந்த குழாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி அந்த பகுதி சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த பள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கழிவுநீர் குழாயை அமைத்து பள்ளத்தை சரி செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு முகாமிட்டு இந்த பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

அந்த பள்ளத்தை சரி செய்யும் பணி நடைபெறுவதால், அந்த பாதை வழியாக செல்லக் கூடிய மாநகர பஸ்கள் இன்று 2-வது நாளாக வேறு வழித்தடங்களில் மாற்றப்பட்டுள்ளன. பெரம்பூரில் இருந்து பிராட்வே செல்லும் 29ஏ, 29இ ஆகிய பஸ்கள் ஓட்டேரி பிரிக்ளின் ரோடு புரசைவாக்கம் வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது.

இதேபோல மணலியில் இருந்து பிராட்வே செல்லும் 64ஏ, 64சி பஸ்கள் புளியந்தோப்பு போலீஸ் நிலையம், மார்க்கெட், கண்ணப்பன் திடல், நடராஜ் தியேட்டர் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

கொரட்டூரில் இருந்து பிராட்வே செல்லும் 35 ஏ, ஐ.சி.எப்., அயனாவரம், புரசைவாக்கம் வழியாக செல்கிறது. 142பி, 142டி 64டி மற்றும் 29ஏ, 29இ ஆகிய பஸ்கள் ஓட்டேரி பிரிக்ளின் சாலை வழியாக சென்றுவரும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News