செய்திகள்
கைது

சரக்கு லாரிகளில் ரூ.10 லட்சம் பொருட்களை திருடிய 3 பேர் கைது

Published On 2019-11-06 17:07 GMT   |   Update On 2019-11-06 17:07 GMT
திருவண்ணாமலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், மேல் செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தபடும் லாரிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளை இரவில் சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பார்கள். அப்போது மர்ம கும்பல் லாரியின் பின்புறம் தார்பாயை கிழித்துவிட்டு அதில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து வந்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை எஸ்.பி. சிபிசக்கரவர்த்திக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

இதையடுத்து போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். நேற்று முன்தினம் இரவு கலசப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் பொருட்களை திருடி கொண்டிருந்த 3 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி யோகி நகரை சேர்ந்த கோட்டீஸ்வரன், பாலகிருஷ்ண நகர் சின்ராசு (34). கோவை என்.ஜி.ஜி. காலனியை சேர்ந்த பொன்ராஜ் (48) என தெரியவந்தது.அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய காலெக்டர் கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் கந்தசாமி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கலசப்பாக்கம் போலீசார் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News