லைஃப்ஸ்டைல்
குண்டு உடலால் உருவாகும் பாலியல் திருப்தியின்மை..

குண்டு உடலால் உருவாகும் பாலியல் திருப்தியின்மை..

Published On 2021-02-11 07:30 GMT   |   Update On 2021-02-11 07:30 GMT
பெண்கள் குண்டாக இருப்பதால் மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை.
நாம் வாழும் இந்த உலகம், குண்டான மனிதர்களால் நிரம்பி வழியப்போகிறது. கிட்டத்தட்ட இப்போது 50 கோடி பேர் அளவுக்கு அதிகமான உடல் எடையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது நூறு பேரில் பத்துபேர் உடல் எடை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் பிரசவத்திற்கு பின்புதான் பெண்களின் உடல் எடை அதிகமாகும் என்ற கருத்து இருந்தது. இப்போது பள்ளியில் படிக்கும் பருவத்திலே, பூப்படையும் காலத்திலே சிறுமிகள் அதிக எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள். கல்லூரிப்பருவத்திலும், கல்யாண காலகட்டத்திலும் பெண்கள் குண்டாக இருப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக அளவில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சத வீதம், பெண்கள் 7.2. சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சத வீதம். சமூக நிலையும், பொருளாதார நிலையும்கூட அதிக உடல் எடைக்கு காரணமாகிறது.

உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9 சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகரிக்கிறது. ஏழைகள் அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில்லை. உண்டாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால் கலோரி எளிதாக செலவாகிவிடுகிறது.

குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல்- மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தாலே உடல் எடையைக் குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மாயாஜாலம்போல் அதிரடியாக உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே பலரிடமும் இருக்கிறது. அப்படி அதிரடியாக உடல் எடையை குறைப்பது ஆபத்தான செயல் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.

உடல் எடையை குறைக்க 1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடப்பது இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.

அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களை அது அதிகமாக தாக்குகிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அதற்கு அதிக உடல் எடை ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை, அதீத உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படையும் நிலையும் உருவாகிறது.

இப்போது ஆணும், பெண்ணும் அதிக எடையுடன் இருப்பதால், கல்யாண வாழ்க்கையில் இணையும் ‘எடை கூடிய தம்பதிகளின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக எடைகொண்ட தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவ் வளவு திருப்திகரமாக அமைவதில்லை. குண்டான உடல் அவர்களது பாலியல் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கிறது.

மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு பாலியல் உறவு மீது சலிப்பும், விரக்தியும் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை பாலியல் உறவுகளில் இருந்து விலக விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக நீலப்படங்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களை, அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

உடல் எடை அதிகரித்தவர்கள் எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டிருப்பதால், அவர்களை கருத்தில்கொண்டும் பாலியல் நிபுணர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் பாலியல் உறவை மேம்படுத்திக்கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களுக்கு தக்கபடியான உணவு வகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மனோரீதியாக அவர்கள் பாலியல் நாட்டம் கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்குகிறார்கள்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க...

உடல் எடை என்பது அதிரடியாக கிடுகிடுவென உயர்வதில்லை. வெகுகால உணவுப் பழக்கமும், பல வருட வாழ்வியல் முறைகளும் படிப்படியாக உடல் எடையை உயர்த்துகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அதனால் ஒவ்வொருமுறை உணவுக்காக வாயை திறக்கும்போதும் உங்களுக்கு அது தேவைதானா? தேவையில்லாமல் ருசிக்காக அதை திணிக்கிறீர்களா என்பதை நினைத்துப்பாருங்கள்.

உணவின் அளவைக் குறையுங்கள். சாப்பிட்ட உணவும் உடலில் அப்படியே கொழுப்பாக படிந்துவிடாத அளவுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் சிந்தியுங்கள்.

வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறையும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.

உடலுழைப்பு குறையும்போது உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், உடலை வேலைக்கு பழக்குங்கள். உடலை சொகுசுக்கு அடிமையாக்கிவிடாதீர்கள்.

தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதனால் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட பிறகே உண்பதை நிறுத்து கின்றனர். அதனால் பாதி அளவு திருப்தி ஏற்பட்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக்கொண்டே இருப்பது, அவர்களது உடல் உடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.

அதிக கொழுப்பு சத்துள்ள பீட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் எடை கூடும்.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது மிக தவறானது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது.

உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது தவறான முன்னுதாரணம். பெண்கள் உடல் எடையால் அவதிப்பட இது முக்கிய காரணம்.

புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது.
Tags:    

Similar News