செய்திகள்
உடுமலை பகுதியில் தக்காளி பழங்கள் சாலையோரம் வீசப்பட்டுள்ளதையும், அதனை மாடு ஒன்று உண்பதையும் படத்தில் காணலாம்.

தக்காளி விலை சரிவால் உடுமலை விவசாயிகள் கவலை - கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

Published On 2021-09-25 11:18 GMT   |   Update On 2021-09-25 11:18 GMT
ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி அதிகளவில் இருப்பதால் பெரும்பாலான சீசன்களில் வரத்து அதிகரித்து விலை குறைந்து வருகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தக்காளிகள் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. 

ஆண்டு முழுவதும் தக்காளி உற்பத்தி அதிகளவில் இருப்பதால் பெரும்பாலான சீசன்களில் வரத்து அதிகரித்து விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது விவசாயி களை வேதனை அடைய செய்துள்ளது. மேலும் தக்காளி விலை விற்பனை செய்ய முடியாத நிலையில் சாலையோரம் வீசும் அவலநிலை ஏற்பட்டுள்ளது . தக்காளிகளை ஆடு ,மாடு உள்ளிட்ட கால் நடைகள் உணவாக்கிக் கொள்கின்றன. இதனால் கால்நடைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

குறைந்த அளவில் தக்காளிகளை கால்நடைகள் உட்கொள்ளும்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரத்தில் தக்காளியில் ஆக்சாலிக் அமிலம் உள்ளதால் அவற்றை அதிக அளவில் உண்ணும் கால்நடைகளுக்கு கார அமிலத்தன்மை நிலை பாதிக்கப்பட்டு அமிலநோய் உண்டாகும். வயிற்று புண்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் வயிற்றில்  உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடுவதால் வயிற்றுப்போக்கு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர்.  

விவசாயிகள் கூறுகையில், தக்காளி விலை சரிவு விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. தற்போது சுமார் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.110 வரை விற்பனையாகிறது. வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.5க்கு வாங்குகின்றனர்.  

உழவு மற்றும் மருந்து, ஆட்கள் கூலி என அனைத்து செலவினங்களும் விவசாயிகளுக்கு இழப்பாக மாறி விடுகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் விற்க முடியாத தக்காளியை காரை ஓரங்களில் வீசி செல்கின்றனர்.

எனவே தக்காளி இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையிலான குளிர்பதனக் கிடங்குகள் , மதிப்புக்கூட்டும் வகையிலான ஜாம் சாஸ் தொழிற்சாலையை உடுமலை பகுதியில் தொடங்க வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News