ஆன்மிகம்
பரமபத வாசல்

அதற்கு ஏன் “பரமபத வாசல்” என்று பெயர்?

Published On 2020-01-06 07:41 GMT   |   Update On 2020-01-06 07:41 GMT
பெருமாள் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். “என்னோடிருப்பீர்களாக” என்று பக்தர்களுக்கு அருளை அளிக்கிறார்.
திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம்.

விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில் தான் பரமபத வாசல். ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், “நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்“ என்றனர். அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக்கு அனுப்பி வைத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும். அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமாள் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். “என்னோடிருப்பீர்களாக” என்று பக்தர்களுக்கு அருளை அளிக்கிறார்.

இத்தகைய சிறப்புடைய “வைகுண்ட ஏகாதசி” என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும். ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது. எல்லா ஊர்களிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். என்றாலும், ஸ்ரீரங்கத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி எப்படி விசேஷமோ, தீபம் என்றால் திருவண்ணாமலை எப்படி விசேஷமோ, அப்படி வைகுண்ட ஏகாதசி விசேஷம் கொண்டது ஸ்ரீரங்கம்.

இந்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி தினம் வருகிறது. அன்று விரதம் இருந்தால் செல்வம் சேரும். மாதத்துக்கு 2 ஏகாதசி வீதம் ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் என்ற வளர் பிறையிலும், கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையிலும் பதினோராவது நாள் வருவதே ஏகாதசி.

அதாவது ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம். ஏகாதசி- என்றால் பதினொன்று நாள் என்று பொருள். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் -5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்றுபடுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி.

இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும். மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி தான் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை என்று அக்னி புராணம் கூறுகிறது. இந்நன்னாளில் விரதம் இருப்போருக்கு திருமாலே பரமபத வாசலைத் திறந்து வைத்து அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம் என்று உமையவளிடம் பரமசிவனே கூறுகிறார். பல்வேறு புராணங்கள் ஏகாதசி விரதத்தின் பெருமையையும், அதனால் வேண்டும் வரம் பெறலாம் என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன.

பாற்கடலில் இருந்து அமிர்தம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி. அந்த அமிர்தத்தைப் போன்று விஷ்ணுவின் அருளை நமக்கு அளிக்கக்கூடிய விரதம் ஏகாதசி விரதம்.
இந்த விரதத்தை எவரெல்லாம் மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையிலும் மேன்மை உண்டாகும். அவர்களுக்கு மரண பயமோ நரக வாசமோ இல்லை.

ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒருவேளை) பகலில் உணவருந்தலாம். அன்றிரவு உணவருந்தக் கூடாது. மறுநாள் ஏகாதசி முழு நாளும் உணவருந்தக் கூடாது. அதற்கடுத்த நாள் துவாதசி. அன்று அதிகாலை உப்பு, புளிப்பு சேர்க்காமல் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதசியன்று கதை பேசி பொழுதைக் கழிக்கக் கூடாது. திருமாலின் அவதாரப் பெருமை சொல்லும் நூல்களைப் படிக்கலாம். பிரபந்தங்களைச் சொல்லலாம். அல்லது விஷ்ணுவை பூஜிப்பது என்று பொழுதைச் செலவிட வேண்டும். ஏகாதசி நாளில் இரவில் தூங்கக் கூடாது. மறுநாள் துவாதசி பாரணை முடித்த அன்று, பகலிலும் தூங்கக் கூடாது.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. விளையாட்டில் ஏணி வழியே ஏறிச் சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அப்பகுதிக்கே வரநேரிடும். ஏணி என்பது புண்ணியம்.

பாம்பு என்பது பாவம்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விளையாடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். தற்போது அந்த பழக்கம் குறைந்து விட்டது. பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக “விளையாட்டு” இது. அன்றைய தினம் கண் விழித்து திருப்பாவை, திருவெம்பாவை, நாலாயிரத் திவ்யபிரபந்தம், நாராயணீயம், புருஷ சூக்தம், விஷ்ணுபதி பாராயணம் செய்வதுமிகவும் நல்லது.

பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு, பிறவா நிலையை அடைவதே பிறந்ததன் நோக்கம். அந்த நோக்கத்தை அடைவதற்கு நமக்கு உதவியாக இருப்பது ஏகாதசி விரதமாகும். எனவே ஜனவரி 6-ந்தேதியை மறந்து விடாதீர்கள்.
Tags:    

Similar News