செய்திகள்
ஆகாஷ் தனுஷ் சங்கர்

திருப்பத்தூரில் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் திமுக பிரமுகர்- 2 மனைவிகள் உள்பட 7 பேர் கைது

Published On 2021-02-18 11:22 GMT   |   Update On 2021-02-18 11:22 GMT
திருப்பத்தூரில் நடந்த அ.ம.முக. நிர்வாகி கொலை வழக்கில் அதேப்பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர், அவருடைய 2 மனைவிகள், மகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வானவராயன் (வயது 30). இவர் திருப்பத்தூர் மாவட்ட அ.ம.மு.க. மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும் பைனாஸ் தொழிலும் நடத்தி வந்தார். கடந்த திங்கட்கிழமை மாலை இவர் பைனாஸ் வசூல் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சினிமா பாணியில் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கொலையாளிகள் காரில் தப்பிச்சென்றுள்ளனர். திருப்பத்தூர் அருகே அந்த கார் விபத்துக்குள்ளானது. இதனால் கொலையாளிகள் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். அந்த காரை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருப்பத்தூர் கவுதமபேட்டையை சேர்ந்த சங்கர் (62) என்பவர் தனது கூட்டாளிகளை வைத்து வானவராயனை கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சங்கர், அவரது மனைவிகள் வசந்தா (52), சாந்தி (55), மகள் ஷர்மிளா (34), சங்கரின் தங்கை மகன் தனுஷ் (25), ஜெயபால் மகன் ஆகாஷ் (26), மற்றும் மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சவுத்திரி (24) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சங்கர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் எனக்கும், வானவராயனுக்கும் கடந்த 2016 முதல் முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்து இருக்கிறோம். தொடர்ந்து எங்களுக்குள் மோதல் இருந்து வந்ததால் வானவராயனை கொலை செய்ய திட்டமிட்டு எதிர்பார்த்து இருந்தோம்.

சம்பவத்தன்று வானவராயன் வந்தபோது திட்டமிட்டபடி கொலை செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரும் திருப்பத்தூர் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சங்கர் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளராக உள்ளார். அவருடைய மனைவி சாந்தி திருப்பத்தூர் நகராட்சி முன்னாள் துணை தலைவர் ஆவார்.
Tags:    

Similar News