ஆன்மிகம்
கோவில் திருவிழா

அகரம்பள்ளிப்பட்டில் அம்மன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு

Published On 2021-08-18 07:47 GMT   |   Update On 2021-08-18 07:47 GMT
அகரம்பள்ளிப்பட்டில் அம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து அதனை கோவிலுக்கு கொண்டு வந்து படையலிட்டு எடுத்துச் சென்றனர்.
வாணாபுரம் அருகே உள்ள அகரம் பள்ளிப்பட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தையொட்டி செவ்வாய்க்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 3-வது செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தடுக்கும் வகையில் கோவில்கள் மூடப்பட்டன இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளிப்பகுதியில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று ஆவணி மாத பிறப்பாக இருந்தாலும் தொடர்ச்சியாக 5-வது செவ்வாய்க்கிழமையையொட்டி காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருவது அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து அதனை கோவிலுக்கு கொண்டு வந்து படையலிட்டு எடுத்துச் சென்றனர்.

மேலும் கோவில் வளாகத்தில் முடி காணிக்கை செலுத்தியும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டும் நேர்த்திக் கடனை செலுத்தினர். கோலாகலமாக நடந்த விழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டனர். வெளி மாவட்டம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் வைத்து படையலிட்டு அன்னதானம் வழங்கினர். ஆற்றங்கரையில் சிறிய ராட்டினங்களும் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர், சிறுமியர், பெண்கள் மகிழ்ச்சியுடன் அதில் ஏறி சுற்றினர்.
Tags:    

Similar News