செய்திகள்
புதுக்கோட்டையில் பெய்த மழையில் குடையை பிடித்தப்படி சென்றவர்களை படத்தில் காணலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை

Published On 2021-04-13 13:37 GMT   |   Update On 2021-04-13 13:37 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசாக தூறல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே மழை பெய்தது.

புதுக்கோட்டையில் நேற்று பகல் 1.30 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது சிறிது நேரம் ஒரே சீராக பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிலர் மழையில் நனைந்தபடி இரு சக்கர வாகனங்களில் சென்றனர். சிலர் குடையை பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது. இந்த கோடை மழை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் விராலிமலை பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 7 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசி மழை பெய்தது. இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.

திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள பூவரசகுடி, கைக்குறிச்சி, வம்பன் நாலுரோடு, வேப்பங்குடி, தோப்புக்கொல்லை, மேட்டுப்பட்டி, திருக்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சிறிதுநேரம் மழை பெய்தது.

ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி, வண்ணராப்பட்டி, தொண்டைமான் ஊரணி, மோளுடையான்பட்டி, வாராப்பூர், நெம்மேலிபட்டி, மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி, பெருங்களூர், கருப்புடையான்பட்டி, குப்பையன்பட்டி, கூத்தாச்சிப்பட்டி, மாந்தாங்குடி, அரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் பலத்த மழை பெய்தது. தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி இப்பகுதியில் மானாவாரி பயிராக பயிரிப்பட்டுள்ள கடலை செடிகளை அறுவடை செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலையில் கன மழை பெய்தது. இந்த மழையால் கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, பனங்குளம், கொத்தமங்கலம், நகரம், சேந்தன்குடி, குளமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்பட்ட கடலைச் செடிகள் திடீர் மழையில் நனைந்து நாசமானது. பல இடங்களில் கடலையும் நனைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
Tags:    

Similar News