தமிழ்நாடு
சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சேலம் மாநகராட்சி ஊழியர்கள்

சேலத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

Published On 2022-01-27 09:43 GMT   |   Update On 2022-01-27 09:43 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
சேலம்:

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம்  19-ந்தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து பிரச்சாரத்தினை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளை  அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில் அரசியல் கட்சிகள்  தங்களது வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும், பிரசார செய்வது தொடர்பான யுக்திகளையும் வகுத்து  செய்து வருகின்றன.

சேலம் மாவட்ட எல்லையில் உள்ள சேலம்-நாமக்கல், சேலம்-திருச்சி, சேலம்- கள்ளக்குறிச்சி, சேலம்-தர்மபுரி, சேலம்-ஈரோடு, சேலம்-கர்நாடகம் உள்ளிட்ட நிரந்தர சோதனை சாவடிகளில்  வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

சோதனை சாவடிகளை கடக்கும்  கார், வேன், ஜீப், பஸ், லாரிகள், மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை அவர்கள் சோதனை செய்து வருகின்றனர். 

மேலும் சேலம் மாநகராட்சி மற்றும் ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கனசாலை ஆகிய 6 நகராட்சி, 33 பேரூராட்சி எல்லை பகுதிகள், மக்கள் நடமாடும் முக்கிய வீதிகளில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து  வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் ஸ்டிக்கர் உட்பட   எந்த விதமான விளம்பரங்களும் செய்ய அனுமதி இல்லை. தேர்தல் பிரசாரங்கள்,  பாதுகாப்புகள்,  தேர்தல் விதி முறைகள் மீறுதல்கள் குறித்து தேர்தல் பொது பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News