செய்திகள்
தேஜஸ் ரெயில்

“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு

Published On 2019-10-22 04:01 GMT   |   Update On 2019-10-22 06:38 GMT
“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. ரெயில் தாமதமாக வந்ததற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும்.
புதுடெல்லி:

டெல்லி-லக்னோ இடையே “தேஜஸ்” ரெயில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது ஐ.ஆர்.சி.டி.சி.யின் கீழ் இயங்கும், முழுக்க முழுக்க தனியார் மயமாக்கப்பட்ட முதல் ரெயில் ஆகும். இந்த ரெயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக காலை 9.55 மணிக்கு புறப்பட்டு டெல்லிக்கு மாலை 3.40 மணிக்கு சென்றது. கான்பூர் அருகே ஒரு ரெயில் தடம் புரண்டதால் இந்த தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்துக்கு இழப்பீடாக, அதில் பயணம் செய்த 450 பயணிகளுக்கு, தலா ரூ.250 வழங்கப்பட உள்ளது.



அதே ரெயில் டெல்லியில் இருந்து லக்னோவுக்கு 1 மணி நேரம் தாமதமாக சென்றது. அதில் பயணம் செய்த 500 பயணிகளுக்கு இழப்பீடு தொகையாக தலா ரூ.100 வழங்கப்பட உள்ளது. ரெயில் தாமதமாக வந்ததற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொறுத்தவரையில், ரெயில் ஒருமணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு தலா 100 ரூபாயும், 2 மணி நேரத்துக்குமேல் தாமதமாக வந்தால் தலா 250 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்து இருந்தது. அதன்படி இந்த தொகை வழங்கப்பட உள்ளது. இந்த இழப்பீடு தொகை ரூ.1.62 லட்சம் ஆகும். மேலும் பயணக் காலத்தில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு தொகை பெற முடியும் என்றும் அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News