செய்திகள்
கோப்புப்படம்

ஓடும் பஸ்சில் 2 பெண்கள் துணிகரம் - முதியவரிடம் நூதன முறையில் 27 பவுன் நகை திருட்டு

Published On 2021-01-10 19:25 GMT   |   Update On 2021-01-10 19:25 GMT
மகளின் திருமணத்துக்காக முதியவர் வைத்து இருந்த 27 பவுன் நகையை ஓடும் பஸ்சில் 2 பெண்கள் நூதன முறையில் திருடிச்சென்றனர்.
பெரம்பூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதையபாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 65). இவர், தன்னுடைய மகளின் திருமணத்துக்காக வீட்டில் வைத்து இருந்த பழைய நகைகளை கொடுத்து புதுப்பிப்பதற்காக 27 பவுன் நகையை பையில் வைத்து கொண்டு சென்னை வந்தார். ஆந்திராவில் இருந்து பஸ்சில் செங்குன்றம் வந்திறங்கிய அவர், அங்கிருந்து மாநகர பஸ்சில்(தடம் எண் 242) ஏறி பாரிமுனைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் 2 பெண்கள் பஸ்சில் ஏறினர்.

ஓடும் பஸ்சில் பெண்கள் இருவரும் சேகர் அருகே நின்றிருந்தனர். அப்போது அவர்கள் காசு கீழே விழுந்ததுபோல் அதை குனிந்து எடுத்தனர். அதன்பிறகு இருவரும் சிறிது தூரத்தில் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டனர்.

பாரிமுனையில் வந்து இறங்கிய முதியவர் சேகர், பையை பார்த்தபோது அதில் இருந்த 27 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் ஏறிய 2 பெண்களும், கீழே குனிந்து காசு தேடுவதுபோல் நடித்து நூதன முறையில் சேகரின் பையில் இருந்த நகையை திருடிச்சென்றது தெரிந்தது.

மகளின் திருமணத்துக்கு வைத்து இருந்த நகை பறிபோனதால் அதிர்ச்சி அடைந்த சேகர், இதுபற்றி எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News