செய்திகள்
இறந்துபோன வேதவள்ளியின் உடலை அடக்கம் செய்யும் காட்சி

கொரோனாவால் தாய்-மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு: உடலை அடக்கம் செய்ய வராத உறவினர்கள்

Published On 2021-06-08 11:22 GMT   |   Update On 2021-06-08 11:22 GMT
வயதானவர்களோ, வசதியற்றவர்களோ கொரோனாவால் உயிரிழக்க நேரிட்டால் உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு உடலை அடக்கம் செய்யக்கூட யாரும் இல்லாத நிலை காணப்படுகிறது.
பூந்தமல்லி:

கொரோனா வைரஸ் தொற்று ஏராளமானோர் உயிரை பறித்து வருகிறது. உறவுகளை இழந்து பல குடும்பங்கள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட உறவினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது ஏழைகளுக்கு மட்டும் பொருந்துவது இல்லை. பணம் இருந்தும் கொரோனா தொற்றால் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குக்கூட உறவுகள் தயக்கம் காட்டி அநாதை பிணங்களாக அடக்கம் செய்யப்படும் நிலை காணப்படுகிறது.

இதைவிடக் கொடுமையாக சில இடங்களில் குடும்ப உறுப்பினர்களும், உறவுகளும் கூட நோய் தொற்றால் பாதித்தவரிடம் நடந்து கொள்ளும் விதம் நெஞ்சை பிழிவதாக உள்ளது.

அதிலும் வயதானவர்களோ, வசதியற்றவர்களோ கொரோனாவால் உயிரிழக்க நேரிட்டால் உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு உடலை அடக்கம் செய்யக்கூட யாரும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தில் நடந்திருப்பது அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

காட்டுப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 75 வயதான மூதாட்டி வேதவள்ளி தனது மகன் பரத்துடன் (50) வசித்து வந்தார். பரத்துக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தாயும் மகனும் தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பரத்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு
கொரோனா பாதிப்பு
இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

மகன் ஆஸ்பத்திரியில் இருந்ததால் தாய் வேதவள்ளி மிகுந்த மன வேதனை அடைந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பரத் இறந்துபோனார். ஆனால் அவரது உடலை வாங்கவும் அடக்கம் செய்யவும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.

இதுபற்றி அறிந்ததும் ஒன்றிய கவுன்சிலரான கவுதமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சீலா சரவணன் ஆகியோர் பரத்தின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர். அவர்கள் பரத்தின் உடலை ஆஸ்பத்திரியில் இருந்து பெற்று உரிய பாதுகாப்புடன் காட்டுப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.



இதற்கிடையே மகன் இறந்த துக்கத்தில் இருந்த தாய் வேதவள்ளியும் மறுநாள் இறந்துபோனார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை. இதனால் அவரது உடல் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கண்ணாடி பெட்டியில் அதே வீட்டிலேயே வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பரத் கொரோனாவால் இறந்திருந்ததால் வேதவள்ளிக்கும் பரிசோதனை செய்திருந்தனர். இதில் அவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியானது. ஏற்கனவே மகன் இறந்ததால் உறவுகள் இல்லாமல் வேதவள்ளி தனிமைபடுத்தப்பட்டார்.

கொரோனாவும் உறுதியானதால் அவரைப்பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. நீண்ட நேரம் வீட்டிலேயே கேட்பாரற்று வேதவள்ளியின் உடல் இருந்தது. இதுபற்றி அறிந்ததும் ஒன்றிய கவுன்சிலர் கவுதமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சீலா சரவணன் ஆகியோர் மனித நேயத்துடன் வேதவள்ளி உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர். அவர்கள் மூதாட்டியின் வேதவள்ளியின் உடலையும் காட்டுப்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

கொரோனாவால் தாய்-மகன் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்களைப்பற்றி உறவினர்கள் கண்டு கொள்ளாமல் உடலைக்கூட அடக்கம் செய்ய முன் வராதது மனித நேயத்தை மரித்துப்போக செய்துள்ளது. இந்த சம்பவம் அனைவரது நெஞ்சையும் கலங்க செய்தது.

Tags:    

Similar News