உள்ளூர் செய்திகள்
வாடிவாசலில் திறந்துவிடப்படும் காளைகள் சீறிப்பாய்ந்து செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ள காட்சி.

பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

Published On 2022-01-12 09:44 GMT   |   Update On 2022-01-12 09:44 GMT
திருச்சி அருகே பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
திருச்சி:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூரில் பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாடுபிடி வீரர்கள் காளைகளுடன் பங்கேற்பார்கள்.

நடப்பு ஆண்டில் விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கு ஜல்லிக்கட்டில் 600 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

இந்தஆண்டில் திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு பெரியசூரியூரில் மாட்டு பொங்கலன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 300 மாடுபிடி வீரர்களும், 400 காளைகளும் பங்கேற்க கலெக்டர் சிவராசு அனுமதி அளித்துள்ளார். 

ஆனால் விழாக்குழுவினர் கூடுதலாக 200 காளைகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் 150 உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர் மாடம் அமைக்கப்படவில்லை. 

மாடுபிடி விரர்கள், விழாக்குழுவினர் அனைவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். மேலும் 2 தினங்களுக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு நெகட்டீவ் சான்று வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  

வாடிவாசல், விழா மேடைகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் ராமராஜ், ஆசை, அண்ணாதுரை, பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சண்முக சுந்தரம், ஊராட்சி  செயலாளர் உதயகுமார், 

முன்னாள் தலைவர் ராமைய்யா, பெரியய்யா, ஒன்றிய கவுன்சிலர் விஜி ஆறுமுகம், விழாக்கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சூரியர் ராஜ மணிகண்டன் மற்றும் நற்கடல் குடி கருப்பண்ணசுவாமி கோவில் நண்பர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News