செய்திகள்
தமிழக அரசு

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்: ஆந்திரா-தெலுங்கானா அரசுகள் ஒத்துழைப்பு தர தமிழக அரசு வலியுறுத்தல்

Published On 2021-10-08 09:13 GMT   |   Update On 2021-10-08 09:13 GMT
காவிரி, கோதாவரியை இணைத்தால் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

சென்னை:

தமிழக அரசு நதிகள் இணைப்பு திட்டத்தில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு குழுவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு கோதாவரி (ஈச்சம்பள்ளி, ஜனம்பேட்டை-காவிரி (கல்லணை) இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தது. அதன் மீதான கருத்துக்களையும் கேட்டது.

தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ளதால் கூடுதல் நீரை வழங்கவும் ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் இருந்து இணைப்பு கால்வாய் உயர்மட்டத்தில் அமைக்கப்பட்டு காவிரியில் கல்லணைக்கு பதிலாக கட்டளை கதவணையில் சேரும் வகையில் இணைக்கப்பட்டால் மிக தேவை உள்ள இடங்களுக்கு தண்ணீரை வழங்கவும், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாயில் தண்ணீரை எடுத்து செல்லவும் ஏதுவாக இருக்கும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசு கோதாவரி- கிருஷ்ணா, பெண்ணாறு-காவிரி இணைப்பின் விரிவான திட்ட அறிக்கையை மீதான கருத்துக்களை ஏற்கனவே தேசிய நீர் மேம்பாட்டு முகமை தலைமை இயக்குனருக்கு அனுப்பி வைத்தது.

அதில் முக்கியமாக இந்த இணைப்பு கால்வாயை தமிழ்நாட்டில் உயர்மட்டத்தில் அமைத்து கல்லணைக்கு பதிலாக கட்டளைகதவணையில் இணைக்குமாறு கோரப்பட்டு இருந்தது.

தேசிய நீர் மேம்பாட்டு முகமை இந்த விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து இதில் தொடர்புடைய அனைத்து மாநிலங்களின் கருத்துக்களுடன் அனுப்பி உள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை பரிசீலனையில் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோது கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

அதேபோல் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த ஜூலை மாதம் மத்திய ஜல்சக்தி துறை மந்திரியை கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்து இந்த திட்டத்துக்கு விரைவில் மற்ற மாநிலங்களின் ஒப்புதலை பெற்று விரைந்து செயல்படுத்த மனு கொடுத்தார்.

இந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்கள் இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் கருணாநிதி முதல்-அமைச்சராக இருக்கும்போதே முதல் கட்ட பணிகள் கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டி தொடங்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இணைப்பு திட்டம் தொடரவில்லை.

மாயனூர் தடுப்பணையில் இருந்து கால்வாய் வெட்டி திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு கட்டளைகால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.


இப்போது அந்த கால்வாய் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்படுகிறது. இந்த திட்டத்தின் 2-ம் பகுதியாக கட்டளை கால்வாயில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாயை கொண்டு செல்லும் பணி கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அடுத்த கட்டமாக புதுக்கோட்டையில் இருந்து குண்டாறு வரை கால்வாயை இணைக்கவும் அதன் பிறகு ராமநாதபுரம் வரை கொண்டு செல்லவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

காவிரி, கோதாவரியை இணைத்தால் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வரை தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

250 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசுகளுடன் பேசி வருகிறது.

இதையும் படியுங்கள்...இன்றும், நாளையும் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Tags:    

Similar News