இந்தியா
ப.சிதம்பரத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு எதிராக மேற்கு வங்காள காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராட்டம்

Published On 2022-05-05 01:14 GMT   |   Update On 2022-05-05 01:15 GMT
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் நடத்தி வரும் வழக்கில்,அவருக்கு எதிராக சிதம்பரம் ஆஜராவது முறையல்ல என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா:

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, தனக்கு சொந்தமான மெட்ரோ பால்பண்ணையின் பங்குகளை கெவென்டீர் என்ற தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது.. இதை எதிர்த்து மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், நேற்று இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, கெவென்டீர் நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மூத்த வக்கீலுமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார். 

பின்னர் அவர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது காங்கிரஸ் வக்கீல்கள் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 
காங்கிரஸ் கட்சியின் உணர்வுகளுடன் ப.சிதம்பரம் விளையாடி வருகிறார் என்றும், மாநில காங்கிரஸ் தலைவர் நடத்தி வரும் வழக்கில், அவருக்கு எதிராக சிதம்பரம் ஆஜராவது முறையல்ல என்றும் போராட்டம் நடத்திய கவுஸ்தவ் பக்சி என்ற வழக்கறிஞர் தெரிவித்தார். 

காங்கிரஸ் நலனுக்கு எதிராக எந்த தலைவர் செயல்பட்டாலும் இதேபோல் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிதம்பரத்திற்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,  இது காங்கிரசாரின் இயற்கையான எதிர்வினை என்றும், அதே சமயத்தில், தொழில் அடிப்படையில் ஒருவர் செய்யும் செயலை யாரும் விமர்சிக்க முடியாது என்றும் கூறினார்.
Tags:    

Similar News