செய்திகள்
ரஷிய அதிபர் புதின்

பெலாரஸ் போராட்டம்: அரசுக்கு ஆதரவாக ராணுவ உதவி செய்ய தயார் - களத்தில் இறங்கிய ரஷியா

Published On 2020-08-30 23:00 GMT   |   Update On 2020-08-30 23:00 GMT
பெலாரஸ் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் தேவைப்படும்பட்சத்தில் நிலைமையை சமாளிக்கவும் அரசுக்கு ஆதரவாகவும் ராணுவ உதவி செய்ய ரஷியா தயாராக இருப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ:

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். 

அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 26 ஆண்டுகள் அலேக்சாண்டர் லூகாஷென்கோ அதிபராக உள்ளார்.

குறிப்பாக, கடந்த 9 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல்
ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என்றும் அதிபர் பதவியில் இருந்து அலெக்சாண்டர் விலகவேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வெளியான உடன் எதிர்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா பெலாரசின் அண்டை நாடான லிதுவேனியாவுக்கு சென்றுவிட்டார். 

அங்கிருந்தவாறு அவர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். மேலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தங்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் எனவும் அவர் ஊக்கமளித்து வருகிறார்.

அலெக்சாண்டர் அதிபர் பதவியில் இருந்து விலகி பொறுப்புக்களை எந்தவித பிரச்சனைகளையும் உருவாக்காமல் தங்களிடம் தந்துவிட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த அதிபர் அலேக்சாண்டர் தான் தான் தேர்தலில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்ற நபர் என்று தெரிவித்தார். 

மேலும், இந்த போராட்டங்கள் பிற ஐரோப்பிய நாடுகளின் தூண்டுதலின் பெயரிலேயே நடைபெற்று வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். நேட்டோ படைகள் தங்கள் நாட்டின் மீது படையெடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி எதிர்கட்சி தலைவரிடம் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.



அலெக்சாண்டரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நேட்டோ, பெலாரஸ் மீது படையெடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது.

ஆனாலும், பிற ஐரோப்பிய நாடுகளுடனான தனது நாட்டு எல்லைப்பகுதிகளில் கூடுதல் ராணுவ வீரர்களை பெலாரஸ் அரசு குவித்துள்ளார். இந்த நடவடிக்கை மற்றும் அதிபர் அலேக்சாண்டரின் 
குற்றச்சாட்டுகளால் ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேட்டோ படைகள் தனது நாடு மீது படையெடுக்கலாம் என்பதால் அதிபர் அலெக்சாண்டர் தனது நட்பு நாடான ரஷியாவின் உதவியை நாடியுள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொடர்பு கொண்ட அலெக்சாண்டர் தனது அரசுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இந்த கோரிக்கையையடுத்து பெலாரஸ் அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில் ராணுவ உதவிகளையும் செய்ய தயார் என்று புதின் அறிவித்துள்ளார். ரஷிய அதிபரின் இந்த அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் விவகாரத்தில் ரஷியா நேரடியாக களத்தில் குதித்துள்ளது.

இந்த அறிவிப்பு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷிய படைகளும் மோதும் நேரடி களமாக பெலாரஸ் உருவாகியுள்ளது.
   



Tags:    

Similar News