கதம்பம்
குழந்தை

குழந்தை பாக்கியம் தரும் கல்யாண கட்டில்

Published On 2022-01-10 10:11 GMT   |   Update On 2022-01-10 10:11 GMT
மனிதனும் மரங்களும் பிரிக்க முடியாத உறவு கொண்டவை. மனிதர்களை போன்றே மரங்களுக்கும் உறுப்புகள் உண்டு, உணர்வுகள் உண்டு; ஆண், பெண், அலி என்ற பால் பாகுபாடுகளும் கூட உண்டு.
பிறப்பு முதல் இறப்பு வரை அதாவது குழந்தைப்பருவ நடைவண்டி முதல் முதியவர்களின் ஊன்றுகோல் வரை மனித வாழ்வில் பெரும் பங்களிப்பை அளித்து வருவது மரங்களே. அதனால்தான் மரங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன. மிகவும் அத்தியாவசிய தேவையான வீடுகள் கட்டுமானத்திலும் மக்கள் வாழ்வியல் பயன்பாட்டிலும் மரங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. எவை எவைக்கு எந்தெந்த மரங்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த  பெரும்தச்சன் அப்பர் லட்சுமணன் கூறுவதை பார்ப்போம்.

வீட்டின் தலைவாசல், கதவுகளுக்கு மிகவும் சிறந்தது பூவரசு மரம் தான். ஆனால் பலரும் தேக்கு மரத்தை தான் தேர்வு செய்வார்கள். பூவரசு நாட்டு மரம் என்பதால் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை. அதுதான் வாசல் கதவுகளுக்கு மிகவும் சிறந்தது. இதற்கு அடுத்த நிலையில் இருப்பது தான் தேக்குமரம்.

ஜன்னல்களுக்கும் இந்த மரங்களையே பயன்படுத்தலாம். அல்லது வேம்பு மரத்தில் செய்யலாம். பலா, கொடுக்காபுளி மரப்பலகையும் இதற்கு ஏற்றதாகும்.

வீட்டில் பயன்படுத்தும் மேசை, நாற்காலிகளை வேம்பு, வேங்கை, காட்டுவாகை போன்ற மரங்களில் செய்யக்கூடாது. ஏனெனில் வேங்கை மரத்தில் இருந்து சாயம் வெளிப்படும். வேப்பமரத்தில் கீறல் விழும். காட்டுவாகை மரத்தில் இருந்து வெளிப்படும் ஒருவகை நெடிவாசத்தால் ஒவ்வாமை ஏற்படும்.

எனவே மேசை, நாற்காலி செய்ய பலா மரமே சிறந்தது. ரோஸ்வுட், பர்மா தேக்கு, பலாசா தேக்கு போன்ற மரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.

வீட்டில் பிரதான இடம் படுக்கையறை. அதில் முக்கிய இடம் பிடிப்பது கட்டில்கள். இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாண கட்டில், மற்றொன்று சாதாரண கட்டில்.

புதுமண தம்பதிகள் பயன்படுத்தும் கல்யாண கட்டில்கள் அவர்களின் பிறந்த நட்சத்திரங்கள் படி கணித்து செய்வோம்.  இந்த கட்டிலை பயன்படுத்துவதால் அந்த தம்பதிகளுக்கு விரைவில் வாரிசு உண்டாகும். இந்த கட்டில்களின் கால்கள், சட்டங்களை செய்ய தேக்கு போன்ற உறுதியான மரங்களை பயன்படுத்தலாம். ஆனால் மேல் பலகையாக பலா மரத்தை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.



புவிஈர்ப்பு விசையை தடுக்கும் சக்தி பலா மரத்துக்கும் கோரைக்கும் தான் உண்டு. அதனால் தான் கோரைப் பாயில் படுப்பது நல்லது என்றார்கள். பொதுவாக கட்டில் மெத்தையில் படுப்பதைவிட கோரைப் பாய்களில் படுப்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

சாதாரண கட்டில்களை எந்த மரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அவற்றின் மேல் கோரைப்பாயை விரித்துப்படுப்பதே நல்லது.

சமையலறையிலும் மரங்களின் பயன்பாடு மிகுதியாக உள்ளது. இதில் மசாலா பொருட்கள் வைக்கும் அஞ்சறைப் பெட்டி முக்கியமானது. இதனை கொடுக்காப்புளி, பலா மரங்களில் செய்வதுதான் நல்லது. ஏனெனில் இவற்றில் செய்யும் போது ஒரு அறையில் வைக்கப்படும் மசாலா பொருளின் வாசனை மற்றொரு அறையில் வைக்கப்படும் வேறொரு பொருளில் கலக்காது. அந்த அளவுக்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் அந்தந்த மசாலா பொருட்களின் தன்மை அப்படியே பாதுகாக்கப்படும்.

உப்பு வைக்கும் மரப்பெட்டியை அக்னிபலா மரத்தில் செய்ய வேண்டும். அது உப்பை நைந்து போகவிடாமல் வைத்திருக்கும்.
மத்தை எடுத்துக் கொண்டால் இரண்டு வகை உள்ளது. 1. மோர் மத்து, 2, பருப்பு மத்து. மோர் கடையும் மத்துவை நெல்லி மரத்தால் செய்ய வேண்டும். அப்போது அதன் சுவை நன்றாக இருக்கும்.

பருப்பு கடையும் மத்துவை வேப்ப மரத்தில் செய்ய வேண்டும். அதன் கசப்பு சுவை நுண்மையாக பருப்பில் சேரும் போது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

அகப்பைகள் தேங்காய் சிரட்டையில் செய்யப்படும். அதன் கைப்பிடி மூங்கிலாகும். சிரட்டை மருத்துவக் குணம் கொண்டது. அந்த காலத்தில் குழந்தைக்கு வயிற்றுவலி என்றால் சிரட்டையை தேய்த்து நாக்கில் தடவுவார்கள்.

இப்போது உரல் உலக்கை பயன்பாடு குறைந்து விட்டது. எனினும் மருந்து, மசாலா இடிப்பதற்கு கழுந்து உலக்கை எனப்படும் சிறு உலக்கையை பயன்படுத்துகிறார்கள். இதனை கருங்காலி மரத்தில் செய்வது நல்லது. செம்மரத்திலும் செய்யலாம்.
ஸ்டீலில் விதவிதமான பீரோக்கள் வந்தாலும் பலரும் மரத்தால் ஆன பீரோக்களையே விரும்புவார்கள். இதனை செய்ய தேக்கு, நூக்கம், பலா மரங்களை பயன்படுத்தலாம்.

வீடுகளில் குழந்தைகள் ஆடும் ஊஞ்சல்களை தேக்கு, பலா, ரோஸ்வுட் மரங்களில் செய்வது நல்லது. அமரும் மணைகளை ரோஸ்வுட், பலா மரத்தில் செய்யலாம். தியானம் செய்ய அத்திமர மணை நல்லது. சில வீடுகளில் பூஜை அறையே மரத்தால் இருக்கும். இதற்கு பெண் மரங்களை பயன்படுத்துவது நல்லது. மரபுவழி மரத் தச்சருக்குத்தான் அது பற்றி தெரியும்.

சாமி சிலைகளை அத்திமரத்தில் செய்வதுதான் முறை. நாதஸ்வரத்தை ஆச்சா மரத்தில் செய்வார்கள். தவிலை பலா மரத்தில் செய்வார்கள்.

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பருவத்தில் விரல்களை சூப்பும் பழக்கம் உண்டு. அப்போது சீப்பாங்கட்டையை கொடுப்பார்கள். அது அம்மாவின் சுண்டுவிரல் நீளமும் அதன் முனைகளில் இருக்கும் மொட்டு தாயின் மார்பு காம்பின் அளவிலும் இருக்கும்.

கட்டை விரலை சூப்பும் குழந்தைகளுக்கு செம்மர சீப்பாகட்டை நல்லது. மோதிர விரல், நடுவிரலை சூப்பும் குழந்தைகளுக்கு பலாமரக் கட்டை நல்லது. இதுபோன்ற பிளாஸ்டிக் கட்டைகளை குழந்தைகளிடம் கொடுப்பது நல்லதல்ல.

குழந்தை பருவத்தில் நடைவண்டியாக பயன்பட்ட மரம் முதிய காலத்தில் கைத்தடியாக உதவுகிறது. ஊன்று கோல் செய்ய பிரம்புதான் உகந்தது.

தொகுப்பு கோ. வசந்தராஜ்
Tags:    

Similar News