செய்திகள்
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Published On 2019-09-13 06:31 GMT   |   Update On 2019-09-13 06:31 GMT
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையாட்டி பாதுகாப்பு வசதி மற்றும் அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரம்:

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பு அக்டோபர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதிவரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதி மற்றும் அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மாமல்லபுரத்திற்கு வந்தனர். அவர்கள் பிரதமர் மோடியும் சீன அதிபரும் ஹெலிகாப்டரில் வந்து இறங்க இருக்கும் திருவிடந்தை ஹெலிபேடு பகுதியை ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் காரில் செல்லும் சாலை எப்படி இருக்கிறது? அவர்கள் தங்குவதற்கு வசதியாக மாமல்லபுரத்தில் ‘ரிசார்ட்’ உள்ளதா? இருவரும் நின்று புகைப்படம் எடுக்க உள்ள கடற்கரை கோவில் பகுதி எப்படி உள்ளது? அங்கு எந்தெந்த இடங்களில் இருநாட்டு நவீன ரேடார்கள் அமைக்க வேண்டும் என்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இவர்களின் உறுதிக்கு பின்னர் சீனாவில் இருந்து அங்குள்ள அதிபரின் பாதுகாப்பு படையினர் மாமல்லபுரத்திற்கு வந்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிகிறது.

தற்போது மத்திய மாநில அனைத்து துறை உயர் அதிகாரிகளும் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News