லைஃப்ஸ்டைல்
ஆசிரியர்களாக மாறிய பெற்றோர்

கொரோனா தொற்றால் மழலையர் பள்ளிகள் மூடல்: ஆசிரியர்களாக மாறிய பெற்றோர்

Published On 2021-06-02 04:31 GMT   |   Update On 2021-06-02 04:31 GMT
கொரோனா தொற்று காரணமாக மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பெற்றோர் ஆசிரியர்களாக மாறி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கின்றனர்.
கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. அவ்வப்போது பல தளர்வுகள் அளித்தாலும் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்ப மற்றும் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது. அடிப்படை கல்வியே கிடைக்காத நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு வடிகாலாக சிலர் தங்களது குழந்தைகளுக்கு தாங்களே கல்வி கற்பித்து ஆறுதல் அடைந்து வருகிறார்கள். புத்தகங்களை வாங்கி வீடுகளில் வைத்து குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள், பறவைகள், விலங்குகள் பற்றி ஆங்கிலம், தமிழில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். சில பெற்றோர் யூ-டியூப்பில் வீடியோக்களை தரம் இறக்கி எழுத்துக்களை கற்றுக்கொடுக்கின்றனர்.

தொற்று குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் தங்கள் குழந்தைகள் எதுவும் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு இதுபோன்ற முயற்சியில் இறங்கி உள்ளனர்.

இந்த கல்வி ஆண்டில் கண்டிப்பாக மழலையர் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியைத் தேடித் தருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் முறையான படிப்பினை தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News