செய்திகள்
தலைமைச் செயலாளர் சண்முகம்

உருமாறிய கொரோனா: மிகவும் உஷாராக இருக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

Published On 2020-12-26 19:32 GMT   |   Update On 2020-12-26 22:13 GMT
மரபியல் மாற்றமடைந்து உருமாறிய புதிய வகை கொரோனா தமிழக மாவட்டங்களில் புகுந்து விடாமல் தடுக்க மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று கலெக்டர்களை தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்பாக கலெக்டர்களுடன் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.

அந்த வகையில் அனைத்து கலெக்டர்களுடனும் காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலாளர்  தலைமைச்செயலகத்தில் இருந்தபடி நேற்று பிற்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறிய அறிவுரைகள் வருமாறு:-

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பை பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

இந்த நிலையில் மரபணு மாற்றங்களுடனான புதிய வகை கொரோனா, தமிழகத்துக்குள் நுழைந்துவிடாமல் கண்காணிப்பது மிக மிக அவசியம். இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

எந்தவகையிலும் அது நுழைந்துவிடாதபடி பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்பை 1 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டுவந்து, மொத்தத்தில் உயிரிழப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் 100 பேருக்கு  கொரோனா பரிசோதனை  மேற்கொண்டால், அதன் தொற்று சதவீதம் 2-க்கும் அதிகமாக உள்ளது. இதை 1-க்கும் குறைவாக இருக்கும்வகையில் கொண்டு வருவதோடு அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவல் முழுமையாக இல்லாத நிலையைக் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வருவோருக்கான காப்பீட்டு திட்டம், பிரதமரின் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ்வரும் ஊரக வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட சில அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
Tags:    

Similar News